வருகிற 18ம் தேதி மகாசிவராத்திரி அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற உள்ளது.
எதிர்வரும் பிப்ரவரி 18 சனிக்கிழமை அன்று மகாசிவராத்திரி நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மக்கள் பலரும் சிவராத்திரி விரதம் மற்றும் பூஜைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 18ம் தேதி சிவராத்திரி அன்று சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளது. பூஜைக்கு தேவையான பொருட்கள் மற்றும் அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள், நெய், தேன், எண்ணெய், பழவகைகள் உள்ளிட்டவற்றை அளிக்க விரும்புபவர்கள் 18ம் தேதி மாலைக்குள் கோவில் உள் அலுவலகத்தில் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவராத்திரி அன்று மாலை தொடங்கி விடியற்காலை வரை விடிய விடிய 4 கால பூஜைகள் நடைபெற உள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதியில் இரவு 10 மணி முதல் 10.45 வரை முதல் கால பூஜையும், 11 மணி முதல் 11.40 வரை இரண்டாவது கால பூஜையும், 12 தொடங்கி 12.40 வரை மூன்றாவது கால பூஜையும், 1 மணி முதல் 1.45 வரை நான்காவது கால பூஜையும் நடைபெறும்.
அதேபோல சுவாமி சன்னத்தியில் முதல் கால பூஜை இரவு 11 – 11.45, இரண்டாம் கால பூஜை 12 – 12.45, மூன்றாம் கால பூஜை 1 – 1.45, நான்காம் கால பூஜை 2 – 2.45 உள்ளிட்ட நேரங்களில் நடைபெறும். அதிகாலை 3 மணிக்கு அர்த்தசாம பூஜை, 4 மணிக்கு பள்ளியறை பூஜை, 5 மணிக்கு திருவனந்தல் பூஜை நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் அனைவரும் மகாசிவராத்திரியில் கலந்து கொள்வதால் மேற்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.