தமிழகத்தில் "தக்காளி காய்ச்சல்" என்ற புதுவிதமான காய்ச்சல் பரவி வருவதாகவும், இந்த காய்ச்சல் குழந்தைகளுக்கு அதிகம் பரவும் வாய்ப்பு இருப்பதால், பெற்றோர்கள் குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தோளில் சிவப்பு நிற அரிப்புடன் ஏற்படும் தக்காளி காய்ச்சல் தமிழகத்தில் பரவ ஆரம்பித்துள்ளதாகவும், முதலில் தொண்டை வலி, பின்னர் காய்ச்சல், கைகால் பாதங்களில் கொப்பளம் என தோன்றும் இந்த காய்ச்சல் சிவப்பு நிறத்தில் அரிப்புடன் மாறும் என்றும், சிலருக்கு மூட்டு வலி, உடல் வலி கடுமையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கோடை காலம் தொடங்கியிருப்பதால், குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், இது ஒரு தொற்றுநோயாக இருப்பதால் வீட்டிலுள்ள பெரியவர்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த காய்ச்சல் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், தொற்றுநோய் பரவல் அதிகரித்து உடல் சோர்வை உண்டாக்கும் என்றும், எனவே இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.