ஆடம்பர காரை அக்குவேராய் கடித்து குதறிய நாய்கள்! – தேனியில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (13:34 IST)
சமீபகாலமாக தமிழகத்தில் நாய்களால் மனிதர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர்கதையாகி வரும் நிலையில் தேனியில் ஒரு காரை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த சில காலமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஆளரவமற்ற பகுதிகளில் கூட்டமாக திரியும் தெரு நாய்கள் அந்த பகுதியில் செல்வோரை கடித்து வைப்பது, வாகனங்களை துரத்தி சென்று விபத்துகளை ஏற்படுத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

சமீபத்தில் சென்னையில் ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று 27 பேரை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தஞ்சை மாவட்டத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுவனை நாய்கள் சென்று கடித்து குதறிய சம்பவம் நடந்தேறியது. அதுபோல தற்போது தேனியில் நூதனமான தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இந்த முறை நாய்கள் ஒரு காரை கடித்து குதறியுள்ளன.

தேனி கே.கே.ஆர் நகரை சேர்ந்த ராஜேஷ் கண்ணா என்பவர் தனது காரை வீட்டின் முகப்பில் நிறுத்தி வைத்திருந்துள்ளார். இரவு நேரத்தில் அவரது காரை சுற்றி வந்த சில தெரு நாய்கள் அந்த காரின் டயர் மற்றும் முன்பக்க பேனட் ஆகியவற்றை கடித்து குதறி சேதம் செய்துள்ளன. நாய்களால் சேதமடைந்த காரை சரிசெய்ய ரூ.50 ஆயிரம் வரை செலவாகும் என கார் ஷோரூமில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். தொடர்ந்து மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்