ஜெல்லி மிட்டாய் தொண்டையில் சிக்கி குழந்தை பரிதாப பலி! – தேனியில் சோகம்!

ஞாயிறு, 19 நவம்பர் 2023 (19:41 IST)
தேனியில் ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை மிட்டாய் தொண்டையில் சிக்கியதால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



தேனியை சேர்ந்த மலர்நிகா என்ற பெண் சமீபத்தில் தன் கணவனை இழந்த நிலையில் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் மலர்நிகாவின் குழந்தை ஜெல்லி மிட்டாய் ஒன்றை சாப்பிடும்போது மிட்டாய் தொண்டையில் சிக்கியதால் குழந்தை மயங்கியுள்ளது. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த மலர்நிகா உடனே குழந்தையை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை தொண்டையில் சிக்கிய ஜெல்லி மிட்டாய் மூச்சுக்குழாயை அடைத்தபடியால் குழந்தை மூச்சுவிட முடியாமல் உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற மிட்டாய்களை குழந்தைகளுக்கு 5 வயதாகும் வரை தர கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்