மோடியே திரும்பிப் போ ஹேஷ்டேக் காங்கிரஸின் சதி -காயத்ரி ரகுராம் புது விளக்கம்

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (12:11 IST)
மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு சமூக வலைத்தளங்களில் ஹேஸ்டேக்கை பிரபலப்படுத்தியது என நடிகை காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார்.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வஞ்சித்துவிட்டதாக தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நிலையில்தான், ராணுவ கண்காட்சியை திறந்து வைக்க நேற்று மோடி சென்னை வந்தார்.
 
அந்நிலையில், மோடியே திரும்பிப் போ என்கிற ஹேஸ்டேக் டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. மேலும், உலக அளவில் 4ம் இடத்தில் உள்ளது. அந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி பலரும் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். இது பாஜகவினருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
 
இந்நிலையில், நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் “இதுபோன்ற ஹேஸ்டேக்குகளில் உங்கள் நேரத்தை செலவிட வேண்டாம். இது அவ்வளவு முக்கியம் இல்லை. காங்கிரஸ் கட்சி பணம் செலவழித்து இப்படி ஹேஷ்டேக்கை விலைக்கு வாங்கியுள்ளது. வேலையில்லாத மக்கள்தான்  காவிரி மற்றும் ஸ்டெர்லைட் ஆகிய பிரச்சனைக்கு பதிலாக இப்படை தேவையில்லாத போராட்டத்தில் ஈடுபடுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்