வங்கக் கடலில் தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மீனவர்களுக்கும் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன் காரணமாக, இன்று முதல் ஏப்ரல் 13 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 11ஆம் தேதி வரை தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடாவில் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்த போதிலும் வேலூர், சேலம், திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.