அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்துள்ள நிலையில், உலகம் முழுவதும் வர்த்தகப் போர் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை உட்பட, உலகின் பல பங்குச்சந்தைகளும் ரத்தக்களரி ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கு அமெரிக்கா 36 சதவீதம் வரி விதித்த நிலையில், அதே சதவீத வரியை சீன அதிபரும் அமெரிக்க பொருட்களுக்கு விதித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க பொருட்கள் மீதான சீனா விதித்த வரியை திரும்ப பெறவில்லை என்றால், அந்த நாட்டுப் பொருட்கள் மீது ஏப்ரல் 9ஆம் தேதி முதல் கூடுதலாக 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரி விதிப்பு தொடர்பான சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படுவதாகவும், பிற நாடுகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால், உலகின் வர்த்தகப் போர் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.