உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அதில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். சில நாட்களுக்கு முன்னதாக சட்டமன்ற உறுப்பினராக அவர் பதவியேற்ற நிலையில் நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகமும், தமிழக சுகாதாரத்துறையும் தெரிவித்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு ஒருசில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.