தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திமுக சார்ப்பில் சண்முகம், வில்சன் ஆகியோர்களும், மதிமுக சார்பில் வைகோவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு மூவரும் வேட்புமனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று திடீரென திமுகவின் சார்பில் என்.ஆர்.இளங்கோ மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஒருவேளை வைகோவின் வேட்புமனு ஏற்கப்படாவிடால் இளங்கோ மாநிலங்களவை உறுப்பினருக்கு போட்டியிடுவார் என தெரிகிறது
தேசத்துரோக வழக்கில் ஒரு ஆண்டு சிறை என வைகோவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் இந்த தீர்ப்பை காரணம் காட்டி வைகோவின் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே தான் திமுக இன்னொரு வேட்பாளரை களமிறக்கியுள்ளதாக கூறப்படுகிறது
அப்படியே இருந்தாலும் மாற்று வேட்பாளராக மதிமுகவின் சார்பில் தானே நிறுத்தப்பட வேண்டும், திமுக வேட்பாளர் எப்படி நிறுத்தப்படலாம் என மதிமுக வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினம் என்பதால் என்.ஆர்.இளங்கோ இன்றே வேட்புமனு தாக்கல் செய்தார். நாளை வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ள நிலையில் வைகோவின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்பது தெரியவரும்