இன்று உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

Mahendran
சனி, 23 நவம்பர் 2024 (09:14 IST)
வங்கக்கடலில் இன்று புயல் சின்னம் உருவாக இருப்பதை அடுத்து, தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இந்த நிலை வலுப்பெற்று, இன்று தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே, நவம்பர் 24 மற்றும் 25 (நாளை மற்றும் நாளை மறுநாள்) ஆகிய இரண்டு நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

மேலும், இது புயலாக வலுப்பெற்று தமிழகம் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நவம்பர் 25 முதல் 28 வரை நான்கு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 25 ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், நவம்பர் 26 ஆம் தேதி  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்