இடைக்கால ஜாமீன் நிறைவு..! மீண்டும் சிறைக்கு திரும்பிய கெஜ்ரிவால்..!!

Senthil Velan
ஞாயிறு, 2 ஜூன் 2024 (19:50 IST)
இடைக்கால ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இன்று சரணடைந்தார்.
 
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் வைத்து கடந்த மார்ச் 11ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையின் விசாரணையை தொடந்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜூன் இரண்டாம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இடைக்கால ஜாமீனை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவரது தரப்பு கோரிக்கை விடுத்த நிலையில் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் கீழமை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
 
இதையடுத்து இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அமலாக்கத்துறை பதிலளிக்கக் கோரி உத்தரவிட்டது. அமலாக்கத்துறை தரப்பில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீனை நீடிக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஜூன் 5ஆம் தேதிக்கு அறிவிப்பதாக ஒத்திவைத்தனர். இந்நிலையில் இடைக்கால ஜாமின் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் மீண்டும் சரண் அடைந்தார். சிறைக்கு செல்லும் முன், வீட்டில் இருந்து மனைவி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் காந்தி நினைவிடத்திற்குச் சென்று கெஜ்ரிவால் மரியாதை செலுத்தினார்.

ALSO READ: அருணாச்சலில் மீண்டும் பாஜக ஆட்சி..! சிக்கிமில் ஆட்சியை தக்க வைத்த கிராந்திகாரி மோர்ச்சா..!

பின்னர் ஆம் ஆத்மி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், இதுபோன்ற சர்வாதிகாரத்தை நாடு பொறுத்துக் கொள்ளாது என்றும் தான் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்