நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
கூட்டத்தொடரில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்தும், காங்கிரஸ் ஆட்சியின் முன்னாள் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். குறிப்பாக நேருவின் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிந்ததாகவும் அவர் கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இதனிடையே இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் மக்களவை அமர்வு முக்கிய காரணங்களுக்காக மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி பிப்ரவரி 10 ஆம் தேதி, சனிக்கிழமையான இன்று மக்களவை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது