பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

Siva

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (16:54 IST)
இளநிலை பொறியியல் படிப்புக்கான துணைக் கலந்தாய்வில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:
 
12-ஆம் வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி பயின்று சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்  மற்றும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025-26 பொதுக் கலந்தாய்வில் கலந்து கொள்ளத் தவறிய மாணவர்கள், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் சேர்க்கை பெற வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில் துணைக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
 
துணைக் கலந்தாய்வில் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று  வரை வழங்கப்பட்டிருந்தது. இந்த துணை கலந்தாய்வில் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் தங்களது விண்ணப்ப பதிவினை மேற்கொள்ள ஏதுவாக, மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் ஆகஸ்ட் 14 வரை விண்ணப்பப் பதிவினை மேற்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 
மேலும், மாணவர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின், தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பொறியியற் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை  தொடர்பு கொள்ளலாம்.மேலும், 1800-425-0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகத் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்