இந்தியாவில் அடுத்த தாக்குதல் – உளவுத்துறை அலர்ட் !

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (15:27 IST)
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தாக்குதல் நடந்ததை அடுத்து மீண்டுமொரு தாக்குதல் இன்னும் சில நாட்களில் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று ஜெய்ஸ் இ முகமது ஏன்ற பயங்கரவாத அமைப்பால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 41 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தற்கொலைப் படைத் தீவிரவாதி அதில் அகமது 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதக் குழுவிற்கு பாகிஸ்தான் ஆதரவளித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து பாகிஸ்தானை வர்த்தகத்திற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கியுள்ளது. பதில் தாக்குதல் நடத்தும் விதமாக இந்திய பாகிஸ்தான் எல்லையில் போர்விமானங்களைக் கொண்டு சோதனை முயற்சியும் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் மூளும் அபாய சூழல் உருவாகியுள்ளது.

இந்த பயங்கரத் தாக்குதலையடுத்து, பிப்ரவரி 16, 17ஆம் தேதிகளில் காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் சிலர் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத் தலைமையுடன் தொலைபேசியில் பேசியதாகவும் அதை  உளவுத் துறை இடைமறித்துக் கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த தொலைபேசி உரையாடலில் காஷ்மீர் அல்லது காஷ்மீருக்கு வெளியில் அதிகளவிலான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் சந்தேகத்திற்குரிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்