காஷ்மீரில் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று ஜெய்ஸ் இ முகமது ஏன்ற பயங்கரவாத அமைப்பால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 41 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தற்கொலைப் படைத் தீவிரவாதி அதில் அகமது 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்.
இதையடுத்து, பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதோடு, பாகிஸ்தானுக்கு 23 ஆண்டுகளாக வழங்கப்பட்ட வர்த்தகத்திற்கு உகந்த நாடு என்ற அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. எனவே, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய அரசின் இம்முடிவால் பாகிஸ்தானுக்கு சுமார் ரூ.3,500 கோடி அளவில் வர்த்தகப் பாதிப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேப்போல இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் தேயிலையும் இனி நிறுத்தப்படும் என தெரிகிறது. இதுகுறித்து இந்திய தேயிலை கூட்டமைப்பின் தலைவரான விவேக் கோயங்கா, ஊடகங்களிடம் பேசுகையில், “பாகிஸ்தான் நாட்டுக்கான இந்தியத் தேயிலை ஏற்றுமதி குறைக்கப்படும். அந்நாட்டின் தாக்குதல்களிலிருந்து நம் நாட்டைக் காப்பதுதான் இப்போது தேவையான ஒன்று. இனி தேயிலை ஏற்றுமதிக்கு பாகிஸ்தானுக்கு மாற்றாக எகிப்து உள்ளிட்ட இதர நாடுகளில் கவனம் செலுத்த இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.