உலக நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் விதித்த கூடுதல் வரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் மிக வேகமாக உயர்ந்து வருகின்றன. சில நாடுகளில் உச்சத்தை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்திய பங்குச் சந்தை இன்று மகாவீர் ஜெயந்தி விடுமுறை என்பதால், பங்குச் சந்தை வர்த்தகம் நடைபெறவில்லை என்பது இந்திய முதலீட்டாளர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா உட்பட உலகின் பல நாடுகளுக்கு கூடுதல் வரியை அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் விதித்ததால், பங்குச் சந்தைகள் பயங்கரமாக அடி வாங்கின. குறிப்பாக "பிளாக் மண்டே" என்று சொல்லும் அளவுக்கு சுமார் 4000 புள்ளிகள் வரை இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சரிந்தது.
அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், தற்போது ட்ரம்ப் திடீரென 75 நாடுகளுக்கு விதித்த வரியை தற்காலிகமாக 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இதன் காரணமாக பங்குச் சந்தை உச்சத்துக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக ஆசிய பங்குச் சந்தைகள் சற்று முன் வர்த்தகம் தொடங்கிய நிலையில், அனைத்துமே உச்சத்திற்கு சென்று உள்ளன. ஜப்பான், ஷாங்காய், தைவான், ஹாங்காங் உள்ளிட்ட பங்குச் சந்தைகளில் மிக அதிகமாக புள்ளிகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பங்குச் சந்தையிலும் இன்று வர்த்தகம் தொடங்கி இருந்தால் அதிகமான புள்ளிகள் உயர்ந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், நாளை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கும் போது இந்திய பங்குச் சந்தையிலும் அதன் தாக்கம் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.