இந்தியா Vs சீனா: கடற்படையை வலுப்படுத்தும் அரசு, இந்திய - பசிபிக் கடலில் என்ன நடக்கிறது?

Webdunia
புதன், 17 மே 2023 (23:21 IST)
இந்தியா அதன் ராணுவ பலத்தை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில், குறிப்பாக கடற்படை திறனை மேம்படுத்திக் கொள்ள ஆசியாவின் பிற நாடுகளுடன் இணைந்து கூட்டு ராணுவ ஒத்திகைகளை மேற்கொள்வதை சீனா தீவிரமாக கண்காணிப்பதாக இந்திய ஊடகங்கள் அண்மையில் பரவலாக குற்றம்சாட்டி இருந்தன.
 
இந்திய - பசிபிக் பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள சீனா விரும்புவதை அடுத்து, இந்த பகுதியில் தமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும் வகையில், கடற்படையை பலப்படுத்தும் முயற்சிகளில் இந்தியா இறங்கி உள்ளதாக ஊடகங்களின் சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
 
சீனா உடனான எல்லை பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் அண்மையில் நடத்தப்பட்ட இரு தரப்பு பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த பின்னணியில் கடற்படையை சீனா உடனான எல்லை பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் அண்மையில் நடத்தப்பட்ட இரு தரப்பு பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை.
 
இந்த பின்னணியில் கடற்படையை நவீனப்படுத்துவது மற்றும் வலுப்படுத்தும் முயற்சிகளில் இந்தியா இறங்கி உள்ளது.
 
பிற ஆசிய நாடுகளுடன் ராணுவ கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வது, புதிய வகை நீர்மூழ்கி கப்பல்களை கடற்படையில் இணைப்பது, ராணுவத்துக்கு நவீன போர் ஆயுதங்களை வாங்குவது போன்ற நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.
 
இந்தியாவின் கடல்சார் முயற்சிகள் என்ன?
இந்திய கடற்படை
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
இந்தியாவிடம் தற்போதுள்ள 17 நீர்மூழ்கி கப்பல்கள், 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கடற்படையில் சேர்க்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
 
இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆளுமை வளர்ந்து வரும் நிலையில், தமது கடற்படை திறனை மேலும் மேம்படுத்த வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு உள்ளது. புதிய நீர்மூழ்கி கப்பல்களை கட்டமைப்பது முதல் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது வரை பல்வேறு நடவடிக்கைகள் இவற்றில் அடங்கும்.
 
இந்தியாவிடம் தற்போதுள்ள 17 நீர்மூழ்கி கப்பல்கள், 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கடற்படையில் சேர்க்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. ஆனால் சீனாவிடம் இருக்கும் நிீர்மூழ்கி கப்பல்களின் எண்ணிக்கை இதை விட கிட்டத்தட்ட மும்மடங்கு அதிகம்.
 
இதுவே, 2020 இல் சீன கடற்படை வசம் இருந்த நீர்மூழ்கி கப்பல்களின் எண்ணிக்கை 66. இவற்றில் டீசல் மற்றும் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள், ஏவுகணை தாங்கி கப்பல்கள் உள்ளிட்டவை அடங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
 
பிரான்ஸ் கடற்படையுடன் இணைந்து Air independent propulsion (AIP) தொழில்நுட்பத்துடன் கூடிய டீசலில் இயங்கும் மூன்று நவீன நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே வடிவமைக்கும் முயற்சிகளை இந்திய கடற்படை முன்னெடுத்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
 
மும்பையில் உள்ள மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம், இந்த நீர்மூழ்கி கப்பல்களை கட்டமைக்க உள்ளது. ஐஎன்எஸ் வக்ஷீர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல், 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பிரான்ஸ் கடற்படையின் ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பல்களின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு, ஆறு கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பல்களை மசாகன் நிறுவனம் ஏற்கெனவே கட்டமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இருப்பினும், 2025 இல் 400 கப்பல்கள், 2030 இல் 440 கப்பல்கள் என, எதிர்காலத்தில் சீன கடற்படையின் ஒட்டுமொத்த போர் திறன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
நவீன நீர்மூழ்கி கப்பல்கள் கட்டுமானத்தை தவிர, கண்காணிப்புப் பணிகளுக்காக ட்ரோன்களை கொள்முதல் செய்யும் நடவடிக்கையையும் இந்தியா முடுக்கிவிட்டுள்ளது.
 
அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு அருகே உள்ள பகுதிகளை கண்காணிக்கும் நோக்கில், குத்தகைக்கு வாங்கப்பட்ட MQ -9 வகை ட்ரோன்களை இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா அங்கு அனுப்பியதாக ‘இந்தியா டுடே’வின் மற்றொரு அறிக்கை தெரிவிக்கின்றது.
 
வங்காள விரிகுடாவில் மியான்மரின் கோகோ தீவுக்கு அருகே உள்ள இந்த பகுதிகளில், ராணுவ தளத்தை மேம்படுத்திக் கொள்ள, அந்நாட்டுக்கு சீனா உதவுவதாக கூறப்படுகிறது.
 
முப்படைகளுக்காக MQ-9 Reaper வகை ட்ரோன்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக, 2022 டிசம்பரில் ஊடகங்களில் தகவல் வெளியாகி இருந்தது.
 
இந்திய - சீன எல்லையில் உள்கட்டமைப்பு பணிகளை துரிதப்படுத்துவதில் தொடங்கி, கடற்படையை வலுப்படுத்துவது வரை இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
 
அத்துடன், புதிய ஹெலிகாப்டர்கள், நவீன ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை வாங்கும் திட்டத்துக்கு இந்திய அரசு கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்திருந்தது.
 
இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.705 பில்லியன் (8.5 பில்லியன் டாலர்கள்). இதில் 80 சதவீதம் அளவுக்கு, பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை தயாரிப்பு, நவீன போர் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக, இந்திய கடற்படையிடம் இருந்து முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன.
 
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), ரஷியாவுடன் இணைந்து உருவாக்கியுள்ள பிரமோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸுக்கு ஏற்றுமதி செய்ய, அந்த நாட்டுடன் 375 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தையும் இந்தியா போட்டுள்ளது.
 
தென் சீன கடல் எல்லையில் அந்நாடு செலுத்தி வரும் ஆதிக்கம் குறித்த தமது கவலையை இந்தியா கடந்த ஏப்ரலில் வெளிப்படுத்தி இருந்தது. இதே போக்கில், இந்தியப் பெருங்கடலில் சீன கடற்படை மூக்கை நுழைக்காது என்பதை சீனா உறுதிப்படுத்தவும் இந்தியா விரும்புவதாக ‘ஹிந்துஸ்தான் டைம்ஸில்’ அப்போது தகவல் வெளியாகி இருந்தது.
 
இந்த கவலையின் காரணமாகவே, தென் சீன கடல் எல்லைப் பகுதிகளில் சீனாவுடன் பிராந்திய பிரச்னைகளை கொண்டிருக்கும் வியட்நாம், மலேசியா, பிலிப்ஃபைன்ஸ் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளுடனான தமது ராணுவ ஒத்துழைப்பை இந்தியா விரிவுப்படுத்தி உள்ளது.
 
ஆசியான் -இந்தியா கடல்சார் கூட்டுப் பயிற்சி (AIME 2023) கடந்த 8 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. தென் சீன கடல் எல்லையில் இந்தியா முதல் முறையாக மேற்கொண்ட இந்தக் கூட்டுப் பயிற்சி, சிங்கப்பூரில் உள்ள சாங்கி கடற்படை தளத்தில் தொடங்கப்பட்டது.
 
இந்த கடற்படை கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்பட்ட பகுதிக்கு அருகில், சீன போர் கப்பல்கள் தென்பட்டதாக இந்திய ஊடகங்கள் முக்கிய செய்தி வெளியிட்டிருந்தன.
 
மற்றொரு முக்கிய நிகழ்வாக, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சிந்துகேசரி, தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் பெரிய நாடான இந்தோனீசியாவில் கடந்த பிப்ரவரியில் நிலை நிறுத்தப்பட்டது. இந்திய போர்க் கப்பல் ஒன்று இந்தோனீசியாவுக்கு பயணம் மேற்கொண்டது இதுவே முதல்முறை.
 
இந்தியாவும் ஜப்பானும் வங்கக் கடல் பகுதியில் கடந்த ஆண்டு கூட்டு ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டன.
 
இரு நாடுகளும் 2012 இல் முதல்முறையாக கடல்சார் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டவைதான். ஆனால், இந்தோ -பசிபிக் கடல் எல்லையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் வேளையில், இந்தியா -ஜப்பான் இணைந்து கடந்த ஆண்டு மேற்கொண்ட கூட்டுப் பயிற்சி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
அத்துடன், இந்திய -ஜப்பான் விமான படைகள் இணைந்து, இந்த ஆண்டு தொடக்கத்தில், “வீர் கார்டியன்” என்ற பெயரில் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டன. இது சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது என்று ஹாங்காங்கில் இருந்து வெளிவரும் ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட் ‘ (South China Morning Post) வர்ணித்திருந்தது.
 
இரு தரப்பு உறவுகளின் தற்போதைய நிலை என்ன?
இந்திய கடற்படை
பட மூலாதாரம்,GETTY IMAGES
கிழக்கு லடாக்கில் கடந்த மூன்றாண்டுகளாக நீடித்து வரும் ராணுவ நடவடிக்கைகளின் காரணமாக இந்தியா -சீனா இருதரப்பு உறவு, அசாதாரண நிலையில் இருக்கிறது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அண்மையில் கவலையுடன் தெரிவித்திருந்தார்.
 
சீன-இந்திய எல்லையில் பொதுவாக நல்ல சூழலே நிலவுகிறது என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் காங் கூறியிருந்ததற்கு பதிலடியாக ஜெய்சங்கர் இவ்வாறு கூறியிருந்தார்.
 
மே 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெற்ற ஷாங்காங் ஒத்துழைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்திய -சீன எல்லைப் பிரச்னை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
 
அமைச்சர்கள் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், கிழக்கு லடாக்கில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாடு கோட்டையொட்டி, சில பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள துருப்புகளை முழுமையாக விலக்கிக் கொள்வதில் உள்ள முட்டுக்கட்டைகளை களைவதற்கான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்