உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தத்திற்காக பேசி வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நேட்டோவில் இணைவதை உக்ரைன் மறப்பது நல்லது என பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, உக்ரைன் மீது போரைத் தொடங்கியது. கடந்த 3 ஆண்டு காலமாக இந்த போர் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப் இந்த போர் பிரச்சினையை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் ட்ரம்ப் ஆரம்பம் முதலே ரஷ்யாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. உக்ரைன் அதிபராக ஜெலன்ஸ்கி இருந்து வரும் நிலையில், உக்ரைனில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென ட்ரம்ப் பேசினார். உக்ரைனை நேட்டோவில் இணைப்பதுடன், போர் நிறுத்தமும் செய்யப்பட்டால் தானே பதவி விலகுவதாக ஜெலன்ஸ்கி அறிவித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பேசிய ட்ரம்ப் “உக்ரைன் நேட்டோவில் இணைவது தொடர்பான பிரச்சினையே இரு நாடுகளுக்கும் இடையேயான போருக்கு முக்கியமான காரணமாக உள்ளது. உக்ரைன் நேட்டோவுடன் இணையும் திட்டத்தை மறந்து விடுவது நல்லது. போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு முடிந்த வரை இழந்த பகுதிகளை அதிகமாக கிடைக்க செய்வதற்கு அமெரிக்க முயற்சிக்கும்” என கூறியுள்ளார்.
பொதுவாக அமெரிக்கா, ரஷ்யா இடையே எப்போதும் ஒரு பகைமை நிலை இருந்து வருவதால் ட்ரம்ப், உக்ரைனுக்கு சாதகமாக நடந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் புதின் பக்கம் அடித்துள்ள ஜம்ப், உக்ரைனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K