அமைச்சர்களின் பெயர்களை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் துண்டு காகிதத்தை பார்க்காமல் படித்துவிட்டால், நான் அரசியலில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று பிரசாந்த் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் வியூக வகுப்பாளர் மற்றும் ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பீகார் மாநில சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும், ஏப்ரல் 11 ஆம் தேதி பிரம்மாண்டமான பேரணி நடத்த உள்ளோம் என்றும் தெரிவித்தார். பேரணிக்கு அனுமதி கேட்டு, நாங்கள் காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றும் கூறினார்.
சட்டசபையில், நிதிஷ் குமாரின் கட்சிக்கு ஒரு இடத்தையும் வெல்ல விடமாட்டோம் என்றும், கூட்டணிகளை மாற்றிக்கொண்டு தான் நிதிஷ் குமார் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்கிறார். அதனால்தான் தொடர்ந்து முதலமைச்சராக இருக்க முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
"நிதிஷ் குமார் கட்சிக்கு ஒரு இடத்தையும் வெல்லாத வகையில் மக்கள் ஓட்டளிக்க மாற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும், மாநில அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் பெயர்களை ஒரு துண்டு காகிதத்தை பார்க்காமல் படிக்குமாறு நிதிஷ் குமாருக்கு நான் சவால் விடுகிறேன். இதை மட்டும் அவர் செய்து காட்டினால், நான் அரசியலை கைவிட்டு அவருக்கு வேலை செய்யத் தயார்" என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
பிரசாந்த் கிஷோரின் இந்த சவாலை அடுத்து, முதலமைச்சர் நிதிஷ் குமார் இதற்கு என்ன பதிலடி கொடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.