பாஸ்கர் ஒரு ராஸ்கல்: திரைவிமர்சனம்

Webdunia
வியாழன், 17 மே 2018 (16:17 IST)
மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'பாஸ்கர் தி ராஸ்கல் என்ற திரைப்படம் தமிழில் அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்ற பெயரில் உருவாகியுள்ளது. பல்வேறு பொருளாதார பிரச்சனைகளை சந்தித்து பலமுறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட இந்த படம் ஒருவழியாக இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
 
பணக்கார தொழிலதிபர் நாசரின் ஒரே மகன் அரவிந்தசாமி. அடிதடி, கட்டப்பஞ்சாயத்து தான் இவருக்கு முழுநேர தொழில். மனைவியை இழந்த அரவிந்தசாமிக்கு ஆகாஷ் என்ற மகன் உள்ளார். இவர் படிக்கும் பள்ளியில் தான் கணவர் இல்லாத அமலாபால் மகள் ஷிவானியும் படிக்கின்றார். ஆகாஷ், ஷிவானி நண்பர்களாக மாற இந்த நட்பு அரவிந்தசாமி, அமலாபால் வரை நீடிக்கின்றது. இந்த நிலையில் ஆகாஷ் மற்றும் ஷிவானி ஆகியோர் அரவிந்தசாமியையும் அமலாபாலையும் இணைத்து வைத்து ஒரே குடும்பமாக வாழ விரும்புகின்றனர். இவர்களுடைய முயற்சி பலித்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்யும் நேரத்தில் திடீரென அமலாபாலின் கணவர் உயிருடன் வந்து நிற்கின்றார். அமலாபால் தனது கணவருடன் இணைந்தாரா? அல்லது அரவிந்தசாமியுடன் இணைந்தாரா? என்பதுதான் மீதிக்கதை
 
அடிதடி வெட்டுக்குத்து, மற்றும் சூரி, ரோபோசங்கர், ரமேஷ்கண்ணாவுடன் காமெடி என ஜாலியான ரோலில் அரவிந்தசாமி நடித்துள்ளார். ஆக்சனில் வெளுத்து கட்டும் அவர், அமலாபாலுடன் ரொமான்ஸ் செய்யும்போது மட்டும் சிறிது தடுமாறுகிறார். அதிலும் அமலாபாலுடன் டூயட் பாடல் பொருத்தமில்லாமல் உள்ளது. மம்முட்டிக்கு இணையாக இல்லாவிட்டாலும் தன்னால் முடிந்த அளவுக்கு அந்த கேரக்டரை உள்வாங்கி செய்துள்ளார்.
 
நீண்ட இடைவெளிக்கு பின் அமலாபால் கவர்ச்சியை ஓரம் கட்டிவிட்டு குடும்பப்பாங்கான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இருந்தாலும் நயன்தாராவின் நடிப்பில் பாதிகூட இவரால் கொண்டு வரமுடியவில்லை. மகளுடன் இவருக்கு உள்ள பாசமான ஒருசில காட்சிகளில் மட்டும் ஜொலிக்கின்றார்
 
ஆகாஷ் கேரக்டரில் நடித்திருக்கும் மாஸ்டர் ராகவன் நடிப்பு இயல்பாக இருப்பதால் ரசிக்க முடிகிறது. குறிப்பாக தந்தை அரவிந்தசாமிக்கு மேனரிசம் குறித்து கற்றுக்கொடுக்கும் காட்சி சூப்பர். ஆனால் நைனிகா வயதுக்கு மீறி பேசும் வசனங்கள் சலிப்பை தட்டுகிறது. 
 
சூரி, ரோபோசங்கர், ரமேஷ்கண்ணா என மூன்று காமெடி நடிகர்கள் இருப்பதால் சிரிப்புக்கு பஞ்சமில்லை. குறிப்பாக பட்டாசு வெடிக்கும் காட்சிகள் விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் உள்ளது. 
 
இடைவேளை வரை ஜாலியாக கதையை கொண்டு சென்ற இயக்குனர் சித்திக் திடீரென அமலாபாலின் கணவர் வருவதாக டுவிஸ்ட் வைத்தவுடன் அதற்கு பின்னர் அவரால் கதையை நகர்த்தி செல்ல முடியவில்லை. அமலாபாலின் பிளாஷ்பேக் காட்சிகள் நம்பும்படி இல்லாததால் இரண்டாவது பாதியில் திரைக்கதை மெதுவாக நகர்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும் அரதப்பழசான காட்சிகள் என்பதால் வெறுப்பு தான் வருகிறது. இயக்குனர் சித்திக் தமிழுக்கு மட்டுமாவது இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.
 
அம்ரேஷ் கணேசனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சுமார்தான்.  விஜய் உலகநாத் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி  மற்றும் கவுரிசங்கரின் படத்தொகுப்பு ஓகே ரகம்
 
மொத்தத்தில் முதல் பாதி மற்றும் காமெடி காட்சிகளுக்காக ஒருமுறை பார்க்கலாம்
 
ரேட்டிங் 2.5/5
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்