இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தற்போது இவர், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இப்போது இவர் தனது பாதையை மாற்றிக்கொண்டு முழுக்க முழுக்க கமர்ஷியலாக ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்தி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளுக்காக ராஜு முருகன் இப்போது கேரளாவி முகாமிட்டுள்ளாராம். இந்த திரைப்படம் கார்த்தியின் 25 ஆவது படமாக அமைவதால் கூடுதல் அக்கறையோடு படக்குழுவினர் உழைக்கிறார்களாம்.
இந்நிலையில் இன்று மாலை இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சம்மந்தமாக டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு ஜப்பான் என்று வைக்கப்பட்டுள்ளதாக தற்போது சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.