ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வடிவேலு தொடர்ந்த வழக்கில் 2 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாகக்கூறி ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சிங்கமுத்து மீது வடிவேலு வழக்கு தொடர்ந்தார். சிங்கமுத்து தன்னைப்பற்றிக் கொடுத்த பேட்டியில், பல பொய்களைக் கூறியது மட்டுமின்றி தன்னை தரக்குறைவாகப் பேசி உள்ளார் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
எனவே சிங்கமுத்து ரூ. 5 கோடியை எனக்கு நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அத்துடன் என்னைப் பற்றி அவதூறு பரப்ப சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ரூ.5 கோடி கேட்டு வடிவேல் தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று சிங்கமுத்து தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.