ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கொடைக்கானல் மற்றும் உதகை செல்பவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக, உதகையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அவதிப்படுவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகைக்கு செல்வதற்கு, நாடுகாணி என்ற பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் இ-பாஸ் மற்றும் வாகன வரி பரிசோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
குன்னூர் செல்லாமல் நேரடியாக உதகைக்கு செல்லும் புதிய பாதை ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும், போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக நேற்று, உதகையில் நடைபெற்ற நிகழ்வுகளை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவைக்கு புறப்பட்டார். அந்த நேரத்தில் உதகையில் போக்குவரத்து நெரிசல் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் வருகையையொட்டி, ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் போக்குவரத்து நிலைமை மேலும் மோசமாகி, உதகை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர் என செய்திகள் வெளியாகியுள்ளன.