இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் பொருட்டு அதிமுகவினர் அடித்த பேனரில் அரவிந்த்சாமி போட்டோவை எம்.ஜி.ஆருக்கு பதிலாக போட்டது வைரலாகியுள்ளது.
இன்று பிரபல முன்னாள் நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் 107வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்படுகிறது. எம்ஜிஆர் பிறந்தநாளில் அன்னதானம் உள்ளிட்டவற்றை செய்ய அதிமுகவினர் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் மாதலூர் ஒன்றியத்தை சேர்ந்த அதிமுகவினர் எம்ஜிஆர் பிறந்தநாளில் அவருக்காக ஃப்ளெக்ஸ் பேனர் ஒன்றை தயார் செய்துள்ளனர். அதில் எம்.ஜி.ஆர் படத்திற்கு பதிலாக நடிகர் அரவிந்த் சாமி படம் இடம்பெற்றுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி “குயின்” என்ற இணையத் தொடர் வெளியானது. அதில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்த கதாப்பாத்திர போஸ்டரைதான் தவறுதலாக எம்ஜிஆருக்கு பதிலாக பேனரில் இடம்பெற செய்துள்ளனர். ஆனால் ஜெயலலிதா படம் சரியாக இடம்பெற்றுள்ளது. இந்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் “நல்லவேளை ஜெயலலிதாவிற்கு பதிலாக அந்த பாஜக ஆதரவு நடிகையின் போட்டோவை வைக்காமல் விட்டார்களே” என கிண்டலாக குறிப்பிட்டுள்ளனர்.