ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

Prasanth Karthick

வெள்ளி, 22 நவம்பர் 2024 (19:19 IST)

சத்குரு அகாடமி சார்பில்  "இன்சைட்" எனும் தொழில் முனைவோர்களுக்கான பிரத்யேக நிகழ்ச்சி நேற்று ஈஷாவில் (21/11/2024) தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டு பேசிய இஸ்ரோ தலைவர் Dr. சோம்நாத் அவர்கள், ‘அப்துல் கலாம் அவர்கள், ராக்கெட்டுகளை உருவாக்கிய மனிதர்களின்  உருவாக்கத்தில் பணிபுரிந்தார்’ எனக் கூறினார். 

 

 

ஈஷாவில் இன்சைட் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் இந்தாண்டு 13-ஆவது இன்சைட் நிகழ்ச்சி நேற்று ஈஷாவில் தொடங்கியது. இதில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் அவர்கள் ‘இஸ்ரோவின் வளர்ச்சி பயணம் மற்றும் வெற்றிக்கான மக்களை உருவாக்குதல்’ எனும் தலைப்பில் பேசினார்.

 

இதில் இந்தியாவின் முதன்மை விண்வெளி ஆராய்ச்சி மையத்தை தலைமை தாங்கிய புகழ்பெற்ற தலைவர்களின் பங்களிப்பு குறித்து அவர் பேசுகையில், ‘இஸ்ரோவை தலைமை தாங்கிய ஒவ்வொரு தலைவர்களும் புதுமையான அணுகுமுறைகள், ஆய்வு மற்றும் அச்சமின்மை என்ற கலாச்சாரத்தை உருவாக்கினர். இது கால்களுக்கு கடிவாளமிடும் மிகக்குறைவான பட்ஜெட்டுகளில் கூட மகத்தான விண்வெளி பயணங்களை சாத்தியப்படுத்தும் ஊக்கத்தையும், உந்துதலையும் பல குழுக்களுக்கு அளித்தது. 

 

இஸ்ரோவின் மிகப் பிரபலமான தலைவர்களில் ஒருவரும், முன்னாள் இந்திய குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் அவர்கள் குறித்து அவர் பேசுகையில், ‘ராக்கெட்டுகளை உருவாக்கிய அனைத்து மனிதர்களின் உருவாக்கத்தில் அவர் பணிபுரிந்தார். மனிதர்களிடம் சிறந்த சக்தி உள்ளது அதனைக் கொண்டு உங்களுக்கு என்ன வேண்டுமோ அதனை நீங்கள் உருவாக்கி விட முடியும் என்று அவர் நம்பினார்’ எனக் கூறினார்.

 

இஸ்ரோவிற்கான பொருளாதாரத்தை திரட்டுவதில் இருந்த சிரமங்கள், விண்வெளி ஆராய்ச்சி மூலம் பொது மக்களுக்கு  கிடைக்கும் நலன்களை விளக்கி அரசியல் அமைப்புகளின் நம்பிக்கையை பெற்றது முதல் இன்று உலகிலேயே அதிகப் புகழும், மதிப்பும் பெற்ற விண்வெளி ஆய்வு மையங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கும் இன்றைய நிலை வரை, இஸ்ரோவின் பரிணாம வளர்ச்சி குறித்தும் அவர் பேசினார்.

 

முன்னதாக இன்சைட் நிகழ்ச்சியில் ஆன்லைன் வாயிலாக கலந்து கொண்ட சத்குரு அவர்கள் பேசுகையில், ‘நம் பாரதம் முன்பு உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடாக இருந்தது. ஆனால் கடந்த 250 ஆண்டுகால ஆக்கிரமிப்பு, நம்மை நம்பிக்கையற்ற வெறும் கிளார்க் பணிகளை தேடும் மக்களாக மாற்றி உள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த தலைமுறை அந்த மனநிலையை கைவிட்டு வருகிறது. நம் நாட்டில் உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் அதாவது 100 மில்லியனுக்கும் அதிகமான தொழில்முனைவோர்கள் உள்ளனர். தற்போதைய தேவை நம் நாட்டின் தொழில்கள் விரிவடைய வேண்டும். இதற்காக தான் இன்சைட் நிகழ்ச்சி’ எனக் கூறினார். 

 

இந்தாண்டு இன்சைட் நிகழ்ச்சியில் 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பங்கேற்றுள்ளனர். டைடன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. சி.கே. வெங்கட்ராமன், வெல்ஸ்பன் லிவிங் லிமிடட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஶ்ரீமதி தீபாளி, டியூப் இன்வெஸ்மென்ட்ஸ் ஆப் இந்தியா (TII) நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவரும், சோழமண்டலம் இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் தலைவருமான ஶ்ரீ வேலையன் சுப்பையா ஆகியோர் முக்கிய விருந்தினராக பங்கேற்று பேசுகின்றனர். 

 

இதற்கு முந்தைய ஆண்டு இன்சைட் நிகழ்ச்சிகளில் ரத்தன் டாடா, இன்போசிஸ் நாராயண மூர்த்தி, பயோகான் கிரண் மசும்தார்ஷா, ஜி.எம். ராவ், கே.வி.காமத், அருந்ததி பட்டாச்சார்யா, ஓலா பவேஷ் அகர்வால் உள்ளிட்ட நாட்டின் பிரதான வணிகத்தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ஈஷா இன்சைட் நிகழ்ச்சி சத்குரு மற்றும் நாட்டின் மிகச் சிறந்த வணிகத் தலைவர்கள் சிலரால், வளர்ந்து வரும் தொழில்முனைவோர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில் சாதனை படைத்த வணிகத் தலைவர்கள் தங்களது வெற்றி அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொள்வார்கள்.

 

மேலும் 20-க்கும் மேற்பட்ட தொழில்துறை வல்லுனர்கள் தொழில் விரிவாக்கம், சாதனை படைத்த வணிகத் தலைவர்களின் அணுகுமுறைகள் குறித்த ஆய்வுகள், வெற்றி பெறுவதற்கான முக்கிய கூறுகள் குறித்து பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடுவார்கள். மேலும் பங்கேற்பாளர்களுக்கு ஈஷா தியான வகுப்புகளும் நடைபெறும். வணிகத்தில் ஈடுபடும் மனிதர்களை தாக்கம் ஏற்படுத்தக் கூடிய  தலைவர்களாக மாற்றம் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்