தமிழகத்தில் உள்ள மக்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள் என்றும், எனவே தமிழகத்தை பொறுத்தவரை நடிகர்களால் அரசியலில் சாதிக்க முடியாது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், 2ஆம் ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த திருமாவளவன், "நடிகர் விஜய் தேர்தலை சந்தித்தால்தான் அவரை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பது தெரியவரும். ஏற்கனவே தமிழகத்தில் பல நடிகர்கள் அரசியலுக்கு வந்து பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.
தமிழ்நாடு மக்கள் விவரமானவர்கள், தமிழக இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள். எனவே, தமிழக இளைய தலைமுறையை அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியாது".
ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில், அதிமுக, திமுகவை பலவீனப்படுத்தலாம் என்று சிலர் கணக்கு போடுகிறார்கள். ஆனால், சினிமா புகழை வைத்து மட்டும் அரசியலுக்கு வந்து, இந்த இரண்டு கட்சியையும் ஓரங்கட்டிவிட முடியாது என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.