சுபாஷ் சந்திரபோஸ் சாகவில்லை.. முதன்முதலில் சொன்ன முத்துராமலிங்க தேவர்! - போஸ்-தேவர் நட்பு!

Prasanth Karthick
வியாழன், 23 ஜனவரி 2025 (13:02 IST)

சுபாஷ் சந்திரபோஸ் பிறப்பால் வங்காளத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தென் தமிழகங்களில் குடும்பத்தில் ஒருவராக அவர் கொண்டாடப்படுகிறார். முக்குலத்தோர் சமுதாயங்களை சேர்ந்தவர்கள் வீடுகளில் நேதாஜியின் புகைப்படங்களை எப்போதும் காணமுடியும். இந்தளவு நேதாஜி அவர்களுக்கு ஒன்றிப்போக காரணமானவர் பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர்.


 

பிரிட்டிஷாருக்கு எதிராக இந்திய விடுதலைக்காக காந்திய வழியில், அஹிம்சா வழியில் பலர் போராடி வந்த நிலையில், ஆயுத புரட்சியால் மட்டுமே சுதந்திரத்தை அடைய முடியும் என அழுத்தமாக நம்பியவர் சுபாஷ் சந்திரபோஸ். இதனால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அவர் அப்போதைய நாஜி ஜெர்மனியின் ஆதரவையும், ஜப்பானின் ஆதரவையும் பெற்று இந்திய தேசிய ராணுவம் (Azad Army)ஐ அமைத்தார். 

 

சுபாஷ் சந்திரபோஸின் ராணுவத்தில் மலேசியா, சிங்கப்பூர் என பல தேசங்களில் இருந்த தமிழர்கள் சென்று இணைந்தார்கள். அதேபோல அதிகளவு தென் தமிழகத்திலிருந்தும் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நேதாஜியின் ராணுவத்தில் சேர முத்துராமலிங்க தேவர் ஊக்குவித்தார்.

 

ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர், சுதந்திர போராட்டக்காலத்தில் நேதாஜியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அவருடன் இணைந்தார். நேதாஜி தொடங்கிய ஃபார்வர்டு ப்ளாக் கட்சியை தமிழகத்தில் நிறுவியர் முத்துராமலிங்க தேவர். நேதாஜியின் வலதுகையாக செயல்பட்ட தேவர், நேதாஜியின் கருத்துகளையும் தமிழக இளைஞர்களிடையே கொண்டு சேர்த்து, தென் தமிழகத்தில் நேதாஜி மீதான பெரும் மதிப்பு உருவாக காரணமாக இருந்தார்.

 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறந்துவிட்டதாக செய்தி வெளியானதும், தமிழர்கள் பலரும் துயரத்தில் ஆழ்ந்தார்கள். நேதாஜிக்காக பல வீதிகளிலும் நினைவேந்தல்கள் நடைபெற்றது. ஆனால் அப்போதும் நேதாஜி சாகவில்லை என்று தீர்க்கமாக பேசினார் முத்துராமலிங்க தேவர். அதனாலேயே நேதாஜி இறக்கவில்லை என்ற நம்பிக்கை இன்றும் முக்குலத்தோர் சமுதாயத்தில் பலரிடம் இருந்து வருகிறது.

 

நேதாஜியின் புகழும், அவர் வீரமும் இன்றும் தமிழ்நாட்டின் வீடுகளில் அவர் புகைப்படத்தோடு நிலைத்து நிற்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்