மேற்கு வங்கத்தில் பல்கலைகழகம் ஒன்றில் மொத்த மதிப்பெண்ணுக்கும் மேல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.
சமீப காலமாக கொரோனா காரணமாக பல பல்கலைகழகங்கள் ஆன்லைன் வகுப்பு, ஆன்லைன் தேர்வு என இயங்கி வருவதால் அவ்வபோது சில குழப்பங்கள் ஏற்படுவது வாடிக்கையானதாக உள்ளது. ஆனால் மேற்கு வங்கத்தில் உள்ள பல்கலைகழகத்தில் நடந்த ஒரு குழப்பம் மாணவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் விஸ்வ பாரதி பல்கலைகழகம் சமீபத்தில் நடந்த எம்.எட் பட்டப்படிப்புக்கான மதிப்பெண்களை ஆன்லைனில் வெளியிட்டது. அதில் மொத்த மதிப்பெண்களே 100 மார்க் கொண்ட தேர்வுக்கு பலருக்கு 151, 196 அதிகபட்சமாக 367 வரை கூட மதிப்பெண்களை வாரி வழங்கியிருக்கிறார்கள். இந்த சம்பவம் மாணவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தொழில்நுட்ப ரீதியான கோளாறு காரணமாக இவ்வாறு மதிப்பெண்கள் பதிவானதாகவும், விரைவில் சரிசெய்யப்படும் என்றும் பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.