இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் மாணவர்கள் உட்பட பலருக்கு பாதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தாலிபான் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தாலிபன் ஆட்சியை இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை. தாலிபான் அரசை அங்கீகரிக்கும் வரை தூதரக விவகாரத்தில் முடிவு எட்டப்படாது என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சிறப்பு உதவிகள் இல்லாதது மற்றும் பணியாளர் எண்ணிக்கை குறைப்பு உட்பட சில காரணங்களால் மூடப்படுவதாக ஆப்கான் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தாலிபான் அரசு நியமிக்கும் தூதருக்கு இந்தியா சட்ட அங்கீகாரம் அளிக்க விரும்பவில்லை என மத்திய அரசு கூறியதை அடுத்து தூதரகம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக வர்த்தக ரீதியாக இந்தியா மற்றும் ஆப்கன் நாடுகளுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் இந்தியாவில் தங்கி இருக்கும் ஆப்கன் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.