நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொண்ட நிலையில் அதிர்ச்சிகரமாக இந்தியாவை வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது ஆஸ்திரேலியா. இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து பலரும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் இறுதி போட்டியில் நடந்த சம்பவம் ஒன்றை கூறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். அதில் அவர் “இன்னிங்ஸ் நடந்துக் கொண்டிருந்தபோது நான் ஜார்ஜ் பெயிலிடம் பேசும்போது நீங்கள் ஏன் எப்போது போல முதலில் பேட்டிங் செய்யவில்லை? என்று கேட்டேன். அதற்கு அவர் நாங்கள் இங்கு ஐபிஎல் உள்ளிட்ட நிறைய போட்டிகளை விளையாடி இருக்கிறோம். சிவப்பு மண் சிதைய வாய்ப்புள்ளது. ஆனால் கருப்பு மண் அப்படியில்லை. பகலில் பேட் செய்ய கருப்பு மண் தான் சிறந்தது. சிவப்பு மண்ணில் பணியின் தாக்கம் இருக்காது. ஆனால் கருப்பு மண் பகலில் மாறலாம். அதுவே இரவு நேரத்தில் கான்க்ரீட் போல மாறும் என சொன்னார்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய பிட்ச்களை ஆஸிஸ் இவ்வளவு துல்லியமாக புரிந்து வைத்திருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக அஸ்வின் கூறியுள்ளார். உலக கோப்பை தோல்விக்கு பின்னர் ஆஸிஸ் இங்கு ஐபிஎல்லில் விளையாடி மைதானங்களை நன்றாக பழகிக் கொண்டுள்ளனர் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அதற்கு வலு சேர்க்கும் வகையில் அஸ்வினின் கூற்றும் உள்ளது. இதனால் அடுத்தடுத்து இந்தியாவில் நடக்கும் எந்த போட்டியையும் ஆஸ்திரேலிய வீரர்கள் எளிதில் கணிக்கும் சாத்தியங்களும் உள்ளது.