சென்னையில் வருகின்ற 24 ஆம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் எலிமினேட்டர் மற்றும் 26ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு அரசு மாநகர பேருந்தில் இலவசமாக பயணிக்க முடியாது என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ஹைதராபாத் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. அந்த வகையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் போட்டி நடைபெற்ற நிலையில் சென்னையில் 8 போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டிகளை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலோடு சேப்பாக்கம் மைதானத்திற்கு குவிந்தனர். முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சென்னை போக்குவரத்து கழகத்தோடு ஒப்பந்தம் போட்டிருந்த காரணமாக சென்னையில் நடைபெற்ற போட்டிகளுக்கு பேருந்து இலவசமாகவே பயணிக்கலாம் என அறிவித்திருந்தது.
இந்த நிலையில் சென்னையில் நாளை நடைபெற உள்ள எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டிக்கு அரசு மாநகர பேருந்தில் டிக்கெட் எடுக்க வேண்டுமென அறிவித்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐபிஎல்(IPL)-2024 கிரிக்கெட் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் வரும் 24.05.2024 மற்றும் 26.05.2024 ஆகிய நாட்களில் சென்னை, MA சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முந்தைய கிரிக்கெட் போட்டிகளில் IPL போட்டிக்கான Online/pre-printed டிக்கெட் வைத்திருந்தால், அந்த டிக்கெட்டுகளை காண்பித்து மாநகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வரும் 24.05.2024 மற்றும் 26.05.2024 நாட்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதி இல்லை.