ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகளில் பாகிஸ்தானில் இந்தியா விளையாடுவது குறித்தான வாக்குவாதத்தை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.38 கோடியை நஷ்ட ஈடாக வழங்க உள்ளது ஐசிசி.
ஐசிசியின் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகள் பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி மைதானங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 8 நாட்டு கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டிகளில் விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என்று இந்திய அணி மறுத்ததுடன், இந்தியாவின் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்துமாறு ஐசிசிக்கு கோரிக்கை விடுத்தது. பாகிஸ்தானும் விட்டுக் கொடுக்காத நிலையில் இந்தியா - பாகிஸ்தானுக்கு பொதுவான இடத்தில் இந்திய அணியின் போட்டிகளை நடத்தலாம் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் அணியும் அடுத்த 2027ம் ஆண்டு வரை தங்கள் அணியும் இந்தியாவிற்கு விளையாட செல்லாது என்றும், தங்களுக்கும் ஒரு பொதுவான இடத்திலேயே போட்டி நடத்தப்பட வேண்டும் என கேட்க அதற்கும் ஐசிசி சம்மதித்தது. அதோடு பாகிஸ்தான் தாண்டி பொது இடத்தில் சாம்பியன்ஸ் ட்ராபி நடத்த வேண்டியிருப்பதை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி நிர்வாகம் ரூ.38 கோடி இழப்பீடாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை கடுமையாக விமர்சித்துள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, இதுகுறித்து ஐசிசி முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K