ஆஷஸ் தொடர்: முதல் போட்டியில் ஆஸ்திரேலிய திரில் வெற்றி!

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (06:56 IST)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் ஜூன் 16 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி ரூட்டின் சதத்தின் உதவியால் 8 விக்கெட் இழப்புகளுக்கு 393 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

அதன் பின்னர் ஆடிய ஆஸி. அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி சதமடித்து அணியை நல்ல ஸ்கோர் நோக்கி வழிநடத்தினார். ஆஸி அணி  முதல் இன்னிங்ஸில் 386 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸையும் அதிரடியாக ஆடிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் 273 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  இதன் மூலம் ஆஸி அணியின் வெற்றிக்கு இலக்காக 281 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸி அணி நான்காம் நாள் ஆட்டமுடிவில் 3 விக்கெட்களை இழந்து 107 ரன்கள் சேர்த்துள்ளது. ஐந்தாம் நாளில் வெற்றிக்கு 174 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்று போட்டி மழையால் தாமதமாக தொடங்கியது.

தொடர்ந்து விளையாடிய ஆஸி அணியில் ரன்கள் சேர சேர ஒவ்வொரு விக்கெட்டாக விழுந்தது. ஒருகட்டத்தில் 8 விக்கெட்களை ஆஸி அணி இழந்த நிலையில் வெற்றிவாய்ப்பு இங்கிலாந்துக்குதான் என கருதப்பட்டது. ஆனால் அஸி அணி கேப்டன் பேட் கம்மின்ஸும், நாதன் லயனும் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி இலக்கை எட்டினர். இதன் மூலம் பரபரப்பான போட்டியில் ஆஸி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸி அணியின் உஸ்மான் கவாஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்