இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது. அதனால் அவர் ஓய்வை அறிவித்தார்.
இந்நிலையில் யுவ்ராஜ் சிங்கின் சக வீரரான ராபின் உத்தப்பா கோலி மீது குற்றம் சாட்டியுள்ளார். அதில் “யுவ்ராஜ் சிங் புற்றுநோயை வென்று சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கைக்கு திரும்பினார். அவரை மற்ற எல்லா வீரர்கள் போலவும் நடத்தியிருக்கக் கூடாது. அவருக்கு யோ யோ டெஸ்ட்டில் இரண்டு புள்ளிகள் குறைவாகக் கொடுக்க சொல்லி கேட்டார். ஆனால் அதை யாரும் கேட்கவில்லை. அவரை உன்னுடைய நுரையீரல் முன்பு போல இல்லை. அதனால் நீ ஆட முடியாது என சொன்னார்கள். அப்போது கோலிதான் கேப்டனாக இருந்தார். கோலியைப் பொறுத்தவரை என்னுடைய வழியை நீ பின்பற்று அல்லது வெளியேறு என்ற மனோபாவத்தில் இருந்தார்” எனக் கூறியுள்ளார்.