சீனாவில் உயிருள்ள மீன்கள், நண்டுகளுக்குப் கோவிட் பரிசோதனை!

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (15:13 IST)
பல லட்சம் மக்களுக்கு மட்டுமில்லாமல் மீன்களுக்கும், நண்டுகளுக்கும் கோவிட் பரிசோதனை செய்கிறது சீனா.

 
சீனாவின் கடலோர மாநகரமான ஜியாமெனில் 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து சுமார் 50 லட்சம் மக்களுக்கு கோவிட் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பரிசோதனை மக்களுக்கு மட்டுமே அல்ல. சிலவகை கடல் வாழ் உயிரிகளுக்கும் இந்த முறை கோவிட் பரிசோதனை செய்யப்படும் என்று அரசு அறிக்கை ஒன்று கூறுகிறது.

மீனவர்கள் துறைக்குத் திரும்பும்போது, மீனவர்களும், அவர்களின் கடல் உணவுகளும் பரிசோதனைக்கு உள்ளாகவேண்டும் என்று ஜியாமெனில் உள்ள ஜிமெய் கடலோர மாவட்ட பெருந்தொற்று கட்டுப்பாட்டுக் குழு ஓர் அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து, உயிரோடு இருக்கும் மீன்களுக்கும், நண்டுகளுக்கும் மருத்துவப் பணியாளர்கள் கோவிட் நோய்க்கான பி.சி.ஆர். பரிசோதனை செய்வதைக் காட்டும் காணொளி டிக்டாக் போல சீன மொழியில் செயல்படும் டுயின் உள்ளிட்ட பல சமூக ஊடகத் தளங்களில் பகிரப்பட்டது.

'இங்கே மட்டும் நடக்கவில்லை'
இது விநோதமாகத் தோன்றினாலும், இப்படி உயிருள்ள மீனுக்கு கோவிட் பரிசோதனை செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. ஜியாமென் நகராட்சி கடல் சார் மேம்பாட்டு அமைப்பை சேர்ந்த ஓர் ஊழியர் இது பற்றி சௌத் சீனா மார்னிங் போஸ்ட் நாளேட்டிடம் பேசும்போது, ஹைனானில் நடந்த தீவிர தொற்றுப் பரவலில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இப்படி செய்வதாக கூறினார்.

"உள்ளூர் மீனவர்களுக்கும் கடல் தாண்டி இருக்கும் மீனவர்களுக்கும் இடையே நடந்த கடல் சார்ந்த பொருள் பரிமாற்றத்தால் இந்த பரவல் முதலில் தூண்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது."

ஆகஸ்ட் மாதம் பிறந்ததில் இருந்து மற்றொரு கடலோர மாகாணமான ஹைனானில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கோவிட் தோற்று ஏற்பட்டுள்ளது. இந்த பரவலுக்கும் மீனவ சமுதாயத்துக்கும் தொடர்பிருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

கொரோனா பரவலுக்கும் கடல் சார் உயிர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று நீண்ட காலமாக ஊடகங்கள் கவலைகளை வெளியிட்டு வருகின்றன. மத்திய சீனாவில் உள்ள வுஹான் நகரில் உள்ள உயிருள்ள ஜீவராசிகளையும், கடல் உணவுகளையும் விற்கும் ஒரு சந்தையில்தான் உலகிலேயே முதல் முறையாக கோவிட் தொற்று பரவியதாக கூறப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

கடல் உணவுகளில் கொரோனா வாழ்வது சாத்தியமல்ல என்றபோதும், சீனாவில் நடந்த பல பரவல்கள் குளிர்ப்பதனப் பொருள்கள், கடல் உணவுகளைக் கையாளும் துறைமுகத் தொழிலாளர்களோடு தொடர்பு படுத்தப்படுகிறது.

இது போன்ற ஒரு பரவல் 2020ல் தலைநகர் பெய்ஜிங்கில் ஏற்பட்டபோது சல்மோன் மீன்கள் குறித்த பீதி பரவியது. இறக்குமதி செய்யப்பட்ட சல்மோன் மீன்களை வெட்டும் பலகைகளில் கோவிட் 19 வைரஸ் காணப்பட்டதாக அரசு ஊடகம் அப்போது தெரிவித்தது.
இதனால், இந்த வகை மீன்கள் கடைகளில் இருந்து அகற்றப்பட்டன. இறக்குமதி நிறுத்தப்பட்டது.

மே மாதம் நீர் யானைகளுக்கு கோவிட் பரிசோதனை செய்யும் படங்களை சீன அரசு ஊடகம் பகிர்ந்தது. அத்துடன், வாரம் இரு முறை இந்த விலங்குகளுக்கு கோவிட் பரிசோதனை செய்வது அவசியம் என்றும் கூறப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்