ஆந்திரா பெற்றோர் கோரிக்கை: "அன்பு மகளை கருணைக் கொலை செய்ய அனுமதியுங்கள்"

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (16:23 IST)
ஹைபோக்ளைசிமிக் எனப்படும் ரத்தத்தில் மிக குறைந்த அளவு சக்கரை இருக்கும் நிலையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்க பணம் இல்லாததால் கருணைக் கொலை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர் ஆந்திரபிரதேசத்தில் உள்ள சித்தூரை சேர்ந்த பெற்றோர்.


 
அவர்களின் நிலையை தெரிந்துகொள்ள அங்கு பயணம் செய்தார் பிபிசி தெலுங்கு சேவையை சேர்ந்த பல்லா சதீஷ்.
 
"அந்த குழந்தைக்கு ஊசி போட்டால் அழுகையை நிறுத்திவிடும். ஆனால் இம்மாதிரியாக ஒருநாளைக்கு 6 லிருந்து 7 ஊசிகள் போட வேண்டும். இரவு 12 மணிக்கு அந்த இன்சுலின் ஊசி போட்டால், அவள் எறும்பு கடித்தது போன்று அசைவால் அவ்வளவுதான்" என்று மிகுந்த துயரத்துடன் சொல்கிறார் அந்த குழந்தையின் தாத்தா பதான் ஆயூப் கான்.
 
ஆந்திரபிரதேசத்தில் உள்ள சித்தூரில் உள்ள பி.கொத்தகோட்டா கிராமத்தை சேர்ந்த பதான் பாவாஜன் மற்றும் பதான் ஷபானாவுக்கு ஹைபோக்ளைசீமியாவுடன் பிறந்தார் ரெட்டி ஷுபானா.


 
இதற்கு முன், அவர்களின் இரண்டு குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டது. எனவே அங்கு உள்ளூர் கடவுளான ரெட்டம்மா என்ற கடவுளின் பெயரை அந்த குழந்தையின் பெயருக்கு முன்னால் சேர்த்தனர். அந்த கடவுள் அந்தக் குழந்தையின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று.
 
ஹைபோக்ளைசீமியாவால் பாதிக்கப்பட்ட ஷுபானா
அவளுக்கு நாள் ஒன்றுக்கு 4 ஊசிகள் போட வேண்டும். மேலும் ஒரு நாளைக்கு 4 முறை அவளின் க்ளூகோஸ் அளவை சோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஷுபானாவின் பெற்றோர் அவளின் மருத்துவ செலவை பார்க்க அவர்களிடம் உள்ளவற்றை எல்லாம் விற்றுவிட்டனர். எனவே இதற்கு மேல் அவர்களால் செலவு செய்ய இயலாத நிலையில் அந்தக் குழந்தையை கருணைக் கொலை செய்ய மனு கொடுத்தனர். ஆனால் நீதிமன்றம் அவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.


 
"அவள் பிறந்தவுடனே அவளுக்கு வியர்வையும், வலிப்பும் வந்துவிட்டது. அவளை உடனே நாங்கள் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அதன்பின் பெங்களூருவில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அதன்பிறகு அவளுக்கு என்ன பிரச்சனை என்று கண்டறிய 10 நாட்கள் ஆனது. அதன்பிறகு அவளின் சக்கரை அளவு குறைந்துள்ளது என்று கூறினர்" என்கிறார் குழந்தை ஷுபானாவின் தாய் ஷபானா.
 
"அதன்பின் அவளுக்கு தினமும் ஊசி போட்டால்தான் அவள் உயிர் வாழ முடியும் என்று தெளிவாக தெரிவித்தனர். அதன்பின் அந்த குழந்தைக்கு அது நரகம்தான். ஊசி போடுவதும், க்ளூகோஸ் அளவை சோதனை செய்வதும், தினசரி நிகழ்வாகிவிட்டது. அவள் இவ்வாறு கஷ்டப்படுவதை பார்த்தால், ஏன் இவ்வாறு கஷ்டப்பட்டு அவள் வாழவேண்டும் என்று எனக்கு தோன்றியது. மருத்துவமனைக்கு சென்ற பிறகு நரகம் என்னவென்று எங்களுக்கு தெரிந்துவிட்டது" என்று அவர் மேலும் கூறினார்.


 
"அவள் வளர்ந்த பிறகு சரியாகும் என மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் அதுவரை அவளுக்கு ஊசி போட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்." என தந்தை பதான் பாவாஜன் தெரிவிக்கிறார்.
 
மூன்று மாதங்களுக்கு முன்பு வரை அவர்கள் பெங்களூருவிலிருந்து ஊசியை வாங்கினர்.
 
"எங்களிடம் பணம் இல்லாத காரணத்தால் அவளுக்கு ஊசி போட முடியவில்லை என்றால் அவளுக்கு உடனே வலிப்பு வந்துவிடும்." என்கிறார் குழந்தையின் அத்தை.
 
இந்த குழந்தையின் நிலை குறித்து தெரிந்த உள்ளூர் மருந்துக்கடை உரிமையாளர் ஒருவர் இந்த ஊசிகளை பெங்களூருவில் இருந்து வரவழைக்கிறார்.
 
நாள் ஒன்றுக்கு 4 முறை ஊசி போட வேண்டும். காலை 6 மணிக்கு, மதியம் 12 மணி, மாலை 6 மணி மற்றும் இரவு 12 மணிக்கு ஊசி போட வேண்டும். அவளின் சக்கரை அளவை சோதனை செய்ய வேண்டும் அதன்பின் அதுபொருத்து அவளுக்கு ஊசி போட வேண்டும்.
 
"சரசாரி அளவைக்காட்டிலும் அந்தக் குழந்தையின் சக்கரை அளவு வெகுவாக குறைந்துவிடும். அதன்பின் அவளின் நிலைமை மோசமாகிவிடும்.
 
அவளின் கண்கள் மூடிவிடும். உடம்பு முழுவதும் வியர்வை வந்துவிடும். அசைவற்று விடுவாள், இதயம் மட்டும் துடிக்கும். கடவுள் எங்களுக்கு குழந்தையை கொடுத்தாலும், சந்தோஷத்தை கொடுக்கவில்லை.பலமுறை நாங்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்ததுண்டு. எங்கள் மகளின் துயரத்தை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எங்களுக்கு இது நரகமாக உள்ளது. எங்கள் மகள் எங்கள் அனைவருக்கும் செல்லம்." என்கிறார் தாய் ஷபானா.
 
பணக்கஷ்டம்
"மருத்துவ சோதனைகளுக்காக நாங்கள் ஒவ்வொரு முறையும் பெங்களூருவுக்கு செல்ல வேண்டியுள்ளது. கடந்த மாதம் பணம் இல்லாத காரணத்தால் எங்களால் செல்ல முடியவில்லை.
 
அது அரசு மருத்துவமனை என்பதால் முதல் மூன்று மாதங்களுக்கு அங்கு சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் அவளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் எங்களுக்கு மருந்துகள் வாங்கவேண்டிய தேவை இருந்தது. ஊசிகளுக்கு நாள் ஒன்றுக்கு 2400 ரூபாய் ஆகும்.
 
இதுவரை எங்கள் வீடு, நகைகள், என அனைத்தையும் விற்று கடனை வாங்கி 12,00,000 வரை செலவு செய்துள்ளோம்.
 
கடன் வாங்கி நாங்கள் ஊசிகளை வாங்கினோம். எங்களால் வட்டி கட்ட முடியவில்லை." என்கிறார் குழந்தையின் தந்தை பாவாஜன்.
 
பாவாஜன் கோழிக்கடையில் வேலை செய்கிறார். அவருக்கு ஒரு நாளைக்கு 300 ரூபாய் கிடைக்கும்.
 
அவரின் தந்தையும், சகோதரரும் சிறிய வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் இருவரும் பாவாஜனுக்கு பெரும் உதவிகளை செய்கின்றனர். ஆனால் தற்போது அவர்களாலும் அவருக்கு உதவி செய்ய முடியவில்லை.
 
"அந்த ஊசிகளின் விலை 2400ரூபாய் என்பதால், இப்போது இரண்டு ஊசிகளுக்கு பதிலாக ஒரு ஊசி செலுத்துகிறோம்" என்கிறார் பாவாஜன்.
 
கருணைக் கொலை
"ஊசியை செலுத்தும்போது பெரியவர்களுக்கே மிகுந்த வலி ஏற்படும் நிலையில், நாளொன்றுக்கு 7-8 ஊசி போடும்போது அவளுக்கு எவ்வளவு வலி ஏற்படும்? எனக்கு செத்துவிடலாம் போன்று தோன்றும்.
 
எங்கள் குழந்தைக்கு இது நரகம். எங்களின் பெற்றோருக்கும் இது நரகம்.என்னுடைய தந்தையும், என்னுடைய அண்ணனும் எங்களால் கடனில் உள்ளனர். நாங்கள் அவர்களுக்கு பாரமாகவிட்டோம்." என்கிறார் பாவாஜன் துயரம் தாங்க முடியாமல்.
 
"இதேபோன்று ஒரு மனுவை யாரோ முன்பொரு காலத்தில் கொடுத்தது எங்களுக்கு நினைவுள்ளது. நாங்கள் அதுகுறித்து எங்கள் நண்பர்களிடம் கேட்டோம். அவர்கள் எங்களை நீதிமன்றத்துக்கு போக சொன்னார்கள். மக்களுக்காக உதவி செய்யும் நபர்களை கொண்டு இந்த மனுவை எழுதினோம். அதன்பின் வழக்கறிஞர்களை வைத்துக் கொள்ள முடியாதவர்களை நீதிமன்றத்தில் காலை அழைத்தனர்.
 
அக்டோபர் 9ஆம் தேதி நாங்கள் நீதிமன்றத்துக்கு சென்று நீதிபதியை பார்த்தோம். ஆனால் அவர் சித்தூர் நீதிமன்றத்தில் இதை வழங்கவேண்டும். என்று சொன்னார்.
 
சித்தூருக்கு போகக்கூட எங்களிடம் பணம் இல்லை. நாங்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை உண்பதில்லை. இரண்டு முறை மட்டுமே உண்டு அந்த பணத்தை குழந்தைக்கு பால் வாங்கிக் கொடுக்கிறோம். நாங்கள் நீதிமன்றத்திலிருந்து வெளியே வரும்போது சில பத்திரிகையாளர்கள் எங்களிடம் பேசினர்." என்கிறார் தாய் ஷபானா.
 
"பலர் இதுவரை எங்களுக்கு உதவி செய்துள்ளனர். சிலர் எங்களின் துயரத்தை பார்த்து எங்களுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கினர். நாங்கள் இதுவரை 5-6 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளோம்.
 
எங்களின் மூத்த மகன் எங்களுக்கு பெரிதும் உதவுகிறார். குழந்தையின் தந்தை எப்படியோ பணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறான்." என்கிறார் அந்த குழந்தையின் தாத்தா பதான் ஆயுப் கான்.
 
அந்த குழந்தையின் தாய் இடைநிலைக் கல்வி வரை படித்துள்ளார். தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்துள்ளார்.
 
அவர்களின் வீட்டில் தட்டு முழுக்க பயன்படுத்தப்பட்ட ஊசிகளை பார்க்க முடிகிறது.
 
"இந்த நோயால் எனது இரண்டு குழந்தைகளும் பிறந்த 20 நாட்களில் இறந்துவிட்டன.
 
என்னால் என்ன முடியுமோ அதை செய்தேன். எனக்கு தெரிந்த எல்லாரிடமும் நான் உதவி கேட்டுவிட்டேன். எங்கள் பகுதி சட்டமன்ற உறுப்பினர்களிடமும் நான் உதவி கேட்டுள்ளேன் அவர்கள் எனக்கு உதவுவதாக தெரிவித்துள்ளனர்.
 
பி.கொத்தகோட்டா மண்டல வருவாய் அதிகாரி, எங்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். இவர்கள் அனைவரும் எங்களுக்கு உதவி செய்வர் என்று நாங்கள் நம்புகிறோம்." என்கிறார் பாவாஜன்.
 
"எங்களுக்கு வீடோ பணமோ தேவையில்லை. அவளை ஒரு நல்ல மருத்துவமனையில் சேர்த்து நல்ல சிகிச்சை அளித்தால் போதும். எங்கள் குழந்தையை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம். அவள் ஆரோக்கியமுடன் இருந்தால் போதும். நாங்கள் மரத்துக்கடியில்கூட வாழ்வோம்." என்கிறார் கண்களில் நீருடன் ஷபானா.
 
இதற்கிடையில் மடனப்பல்லே சட்டமன்ற உறுப்பினர் மொகமத் நவ்ஸ் பாஷா அவசர உதவிக்காக குழந்தையின் பெற்றோருக்கு தற்போது ரூபாய் 11,875 வழங்கியுள்ளார்.
 
ஹைபோக்ளைசிமியா என்றால் என்ன?
 
தேசிய சுகாதார நிறுவனத்தின் தகவல்படி, ஹைபோக்ளைசீமியா என்பது, ரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு குறைவாக இருப்பது. அந்த நபரின் ரத்த க்ளூகோஸின் அளவு ஒரு டெசி லிட்டருக்கு 70 மில்லிகிராமாக இருக்கும் அல்லது அதைவிட குறைவாக இருக்கும். பொதுவாக ரத்த க்ளூகோஸின் அளவு 99 mg/dL ஆக இருக்க வேண்டும்.
 
இதனால் எரிச்சல், பதற்றம், தடுமாற்றம், பசி, வியர்வை மற்றும் அதிகளவிலான இதய துடிப்பு ஆகியவை ஏற்படும்.
 
இதற்கு சிகிச்சை அளிக்கவில்லை என்றால் அவருக்கு வலிப்பும், நினைவிழப்பும் ஏற்படும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்