வெள்ளை குதிரையில் மலையேறிய கிம் ஜாங்-உன்: முக்கிய அறிவிப்பு வெளியாகிறதா?

புதன், 16 அக்டோபர் 2019 (21:52 IST)
வட கொரியாவின் மிக உயரமான மலையை குதிரையில் சவாரி செய்து ஏறியிருக்கிறார் அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங்-உன்.
பனி போர்த்திய பேக்டு மலையில், வெள்ளைக் குதிரையில் அவர் சவாரி செய்வது போன்ற புகைப்படங்களை அந்நாட்டு அரசு ஊடகம் கேசிஎன்ஏ வெளியிட்டுள்ளது.
 
2,750 மீட்டர் உயரம் கொண்ட பேக்டு மலையை இவர் ஏறுவது இது முதல் முறையல்ல. இதுபோன்று அவர் ஏதேனும் செய்தால், ஏதோ பெரிய அறிவிப்பு வரப் போகிறது என்று அர்த்தம் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
இந்த மலை அந்நாட்டில் ஒரு சிறப்பான அடையாளத்தை பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல், கிம் ஜாங்-உன்னின் தந்தை பிறந்த இடமும் அதுதான்.
 
 
வடகொரியா: கிம் ஜாங்-உன்னின் நம்பிக்கைக்குரிய 9 பேர்
 
இதுதொடர்பாக புதன்கிழமையன்று கேசிஎன்ஏ வெளியிட்ட அறிக்கையில், "கொரிய வரலாற்றில், இதுபோன்று இவர் பேக்டு மலையில் குதிரையில் சென்றது ஒரு மிக முக்கிய நிகழ்வு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
"பேக்டு மலையில், அவர் குதிரை மீது அமர்ந்திருந்தபோது, ஒரு மிக சக்திவாய்ந்த நாட்டை உருவாக்க அவர் கடந்து வந்த போராட்டங்களை உணர்ச்சிகரமாக நினைத்து பார்த்தார்" என்று கேசிஎன்ஏ அறிக்கை தெரிவிக்கிறது
2017ஆம் ஆண்டு, புத்தாண்டின்போது பேசுவதற்கு சில வாரங்களுக்கு முன்பாக அவர் இந்த மலைக்கு சென்றிருந்தார்.
 
பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்கான செயலா?
 
கொரிய தீபகற்பத்தின் புனிதமாக இடங்களில் ஒன்றான பேக்டு மலையில், பனிக்காலத்தின் முதல் பனியில் இவ்வாறு வெள்ளைக் குதிரை மீது சவாரி செய்வது போன்ற புகைப்படங்கள் வெளிப்படுத்தும் சக்திக்கு எதுவும் ஈடாகாது.
 
கிம்மின் குடும்பப் பின்னணியுடன் ஒன்றிணைந்த பேக்டு மலையில் சவாரி செய்வது, அவர்களின் வலிமை மற்றும் அதிகாரத்தை காண்பிப்பதற்கான முயற்சியாக இருக்கலாம். வட கொரியர்களுக்கு அவர்களின் தலைவரின் சக்தி என்ன என்பதையும், வீரம் என்ன என்பதையும் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாக இருக்கும்.
 
ஆனால், இதுதொடர்பாக அரசு ஊடகத்தின் அறிக்கை என்ன சொல்கிறது என்பதை பார்க்க வேண்டும்.
 
அந்த அறிக்கையின் கடைசி வரியை முக்கியமாக கவனிக்க வேண்டும். "இந்த உலகத்தை ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரு பெரிய திட்டம் இருக்கும்" என்று தலைவர் கிம்முடன் இருந்த அதிகாரிகள் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு முன்னதாக கிம் ஜாங்-உன் இந்த மலைக்கு சென்ற போதெல்லாம், மிக முக்கியமான முடிவுகளை அறிவித்தார்.
 
நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை சோதனை செய்வதில்லை என்று அமெரிக்காவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தில் இருந்து விலகுவது குறித்து கிம் யோசித்திருக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. தற்போது அமெரிக்கா அதிபர் டிரம்ப், சில உள்நாட்டு மற்றும் மற்ற வெளிநாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்தி வருவதால், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிலுவையில் இருக்கிறது.
 
பேக்டு மலையில் குதிரை சவாரி செய்து, டிரம்ப் நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க இதனை கிம் செய்திருக்கலாம்.
 
இல்லையென்றால் பனிக்காலத்தின் முதல் பனியை அனுபவித்து மகிழ இந்த பயணத்தை மேற்கொண்டாரா?
 
வரும் மாதங்களில் இதற்கான விடை தெரிய வரலாம்.
 
பேக்டு மலை
 
குறைந்தது மூன்று முறையாவது வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் பேக்டு மலை ஏறியிருப்பார். 2018ஆம் ஆண்டு, தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுடன் சேர்ந்து அங்கு சென்றார்.
 
பேக்டு மலை, வெடிக்கக்கூடிய தன்மையில் இருக்கும் எரிமலை, டங்குனின் பிறப்பிடம் ஆகும். 4000 ஆண்டுகளுக்கு முன் முதல் கொரிய ராஜ்ஜியத்தை நிறுவியவர் இவரே.
 
தலைநகர் பியோங்யாங்கில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும், இந்த மலை, வட கொரியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்