சௌதி பேருந்து விபத்து: 35 பேர் உயிரிழப்பு!

வியாழன், 17 அக்டோபர் 2019 (13:02 IST)
சௌதி அரேபியாவின் மெதினா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரபூர்வ ஊடகமான செளதி பிரஸ் ஏஜன்ஸி உறுதிபடுத்தியுள்ளது.
 
மேலும், இந்த விபத்தில் காயமடைந்த நான்கு பேர் அல்-ஹம்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மெதினாவில் இருந்து 170 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அல்-அக்ஹால் கிராமத்தின் அருகிலுள்ள கிஜ்ரா சாலையில் புதன்கிழமை இரவு 7 மணியளவில் கனரக வாகனம் ஒன்றோடு பேருந்து மோதியதை தொடர்ந்து இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
 
அரேபியர்கள் மற்றும் ஆசிய நாட்டவர்கள் இந்தப் பேருந்தில் பயணம் செய்ததாக செளதி பிரஸ் ஏஜன்ஸியின் அறிக்கை கூறுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த விபத்துக்காக இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
சௌதி அரேபியாவில் நடைபெற்ற பேருந்து விபத்து செய்தியை கேட்டு கவலையடைந்துள்ளதாகவும், இதில் உயிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.
 
காயமடைந்தோர் விரைவாக குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோதி குறிப்பிட்டுள்ளார். சௌதி செம்பிறை சங்கமும், பிற அவசர சேவைகளும் சம்பவ இடத்தை சென்றடைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. விபத்து தொடர்பான விசாரணையும் தொடங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்