எரிபொருளை அள்ளி செல்ல ஓடி வந்த மக்கள்; வெடித்து சிதறிய டேங்கர்! - 147 பேர் உடல் கருகி பலி!

Prasanth Karthick
வியாழன், 17 அக்டோபர் 2024 (10:27 IST)

நைஜீரியாவில் கவிழ்ந்து விழுந்த டேங்கரில் இருந்து எரிபொருளை அள்ளி செல்ல மக்கள் முயன்றபோது டேங்கர் லாரி வெடித்ததில் பலர் தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

நைஜீரியா நாட்டின் ஜிகாவா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் டேங்கர் லாரி ஒன்று எரிபொருளை நிரப்பிக் கொண்டு சென்றுள்ளது. அப்போது எதிரே ஒரு லாரி வேகமாக வந்த நிலையில், அதன் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக டேங்கர் லாரியின் ஓட்டுனர் வண்டியை வேகமாக திருப்ப முயல, நிலைதடுமாறிய டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்தது.

 

இதனால் டேங்கரில் நிரப்பப்பட்டிருந்த எரிபொருள் சாலையில் கொட்டிய நிலையில், அதை பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள வாளி, பக்கெட்டுகளை கொண்டு வந்து எரிபொருளை அவற்றில் நிரப்பியுள்ளனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி தீப்பிடித்து வெடித்தது. சாலை முழுவதும் எரிபொருள் சிந்தி கிடந்த நிலையில் தீ மளமளவென சாலையிலும் பற்றியது.
 

ALSO READ: நண்பனை பழிவாங்க விமானங்களுக்கு வெடிக்குண்டு மிரட்டல்! - சத்தீஸ்கரில் சிறுவன் கைது!
 

இதனால் எரிபொருளை அள்ளிக் கொண்டிருந்த மக்கள் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 147 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நைஜீரியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்