நைஜீரியா: கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் 160 பேரை கடத்திச் சென்றது யார்?

Prasanth Karthick

திங்கள், 27 மே 2024 (16:56 IST)
நைஜீரியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள நைஜர் மாநிலத்தின் தொலைதூர கிராமத்தில் ஆயுதக்குழுவினரால் பத்து பேர் கொல்லப்பட்டனர், 160 பேர் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



நைஜீரியாவின் இஸ்லாமிய ஆயுதக்குழுவான போகோ ஹராம் குழுவை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், கூச்சி எனும் கிராமத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை படையெடுத்ததாக உள்ளூர் அதிகாரி அமினு அப்துல்ஹமீது நஜுமே பிபிசி உலக சேவையிடம் தெரிவித்தார்.

கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் கொல்லப்பட்டவர்களில் அப்பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த வேட்டையாடும் நபர்களும் அடங்குவர் என்றும் அவர் கூறினார்.

அந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் மோட்டார் வாகனங்களில் அந்த கிராமத்திற்குள் நுழைந்து, இரண்டு மணிநேரத்திற்கும் இருந்ததாகவும், அங்கிருந்து உணவு, டீ போன்றவற்றை தயாரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

"அதிகாரிகளின் தோல்வி"

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தன் சமூக ஊடக பக்கத்தில், இந்த சம்பவத்திற்கு “ஆழ்ந்த கவலையை” வெளிப்படுத்தியுள்ளது.

“துப்பாக்கி ஏந்திய நபர்கள் கிராமத்திற்குள் படையெடுத்தது, நைஜீரிய அதிகாரிகள் மக்களின் உயிர்களை காப்பாற்றுவதில் தோல்வியடைந்ததை உணர்த்தும் மற்றொரு நிகழ்வு" என தெரிவித்துள்ளது.

“2021-ம் ஆண்டிலிருந்து துப்பாக்கி ஏந்திய நபர்கள் கூச்சி கிராமத்தில் தொடர்ச்சியாக தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர். பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்துவருகின்றனர்" என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

“கடத்தப்படாமல் இருக்க அவ்வப்போது மக்களிடம் துப்பாக்கி ஏந்திய நபர்கள் லட்சக்கணக்கான நைரா-வை (நைஜீரிய பணம்) கேட்கின்றனர். இத்தகைய தொடர்ச்சியான கடத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என நைஜீரிய அதிகாரிகளை வலியுறுத்துகிறோம். அடிக்கடி நிகழும் இத்தகைய கடத்தல்கள் மற்றும் கொலைகள், மக்களை பாதுகாப்பதில் அதிகாரிகள் தோல்வியடைந்ததற்கான தெளிவான ஆதாரம்.” என்று அநத் அமைப்பு கூறியுள்ளது.

நைஜர் மாநிலத்தில் இத்தகைய தாக்குதல்கள் வழக்கமாகியுள்ளன. இந்த துப்பாக்கி ஏந்திய நபர்களுக்கு ஜிகாதி அமைப்புகளுடன் தொடர்புள்ளதா என்பதில் தெளிவாக தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்