பெண்களின் கல்விக்காக உயிரையும் கொடுப்பேன்..! – இன்று மலாலா தினம்!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (12:45 IST)
பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக துப்பாக்கி குண்டுகளை உடலில் தாங்கிய சிறுமி மலாலாவை போற்றும் விதமாக இன்று மலாலா தினம் கொண்டாடப்படுகிறது.

பாகிஸ்தானின் மிங்கோரா பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஜியாவுதீன் யூசுப்சய். சமூக சேவகருமாக விளங்கிய இவரது பெண் குழந்தைதான் மலாலா யூசுப்சய். சிறுவயது முதலே படிப்பில் சிறந்து விளங்கிய மலாலா குழந்தைகளின் கல்வி தொடர்பான சமூக சேவைகளிலும் ஆர்வம் செலுத்தி வந்தார்.

தாலிபான் அதிகாரமிக்க அப்பிராந்தியத்தில் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்ட நிலையில் 2009 முதலாக பிபிசிக்கு அங்கு பெண் குழந்தைகளுக்கு மறுக்கப்படும் கல்வி குறித்து தொடர்ந்து எழுதினார். இந்நிலையில்தான் 2012ம் ஆண்டில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மலாலாவை தாலிபான் தீவிரவாதிகள் சுட்டனர்.

இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய மலாலா உலகம் முழுவதும் கல்வி மறுக்கப்பட்ட பெண்களின் அடையாளமாகவே பார்க்கப்பட்டார். உயிர் பிழைத்து மீண்டு வந்த மலாலா உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். ஐநா சபை இவரை பெண் குழந்தைகள் கல்விக்கான தூதராக கௌரவப்படுத்தியுள்ளது.

பெண் குழந்தைகளின் கல்வி முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக மலாலா பிறந்த தினமான ஜூலை 12ம் தேதியை மலாலா தினமாக ஐ.நா சபை கடந்த 2013 முதலாக அங்கீகரித்து கடைபிடித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்