அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்று மூன்று மாதமே ஆன நிலையில், அவருக்கு எதிராக அமெரிக்காவில் மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளதாகவும், அவர் உடனே பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டு வருவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு வரி விதித்ததால் வர்த்தகப் போர் தொடங்கியுள்ளது. இதனால் அமெரிக்காவில் ஏராளமான வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்றும், அது மட்டும் இல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலை மிகப்பெரிய அளவில் உயரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்க மக்கள் அதிருப்தி அடைந்து, டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் கூட்டணிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல மாகாண தலைநகரங்களில், நாடு முழுவதும் இந்த போராட்டம் நடந்து வருவதாகவும், டிரம்புக்கு எதிராக கோஷம் எழுப்பி வருவதாகவும், டிரம்புக்கு எதிரான பதாகைகளையும் ஏந்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த போராட்டம் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், டிரம்பின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. தகுதியான பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு, மருத்துவ உதவி ஆகியவற்றை அவர் எப்போதும் பாதுகாப்பார் என்று தெரிவித்துள்ளது.