மத்திய அரசு இன்று சிலிண்டர் விலையை திடீரென ஐம்பது ரூபாய் உயர்த்திய நிலையில் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை அடித்தட்டு மக்களின் சுமையை உயர்த்தும் வகையில் சிலிண்டர் விலையை உயர்த்தியதை கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டு முதல், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் 410 ரூபாயில் இருந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே போய் தற்போது ரூ 820 என்ற அளவில் உயர்ந்துள்ளது. தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையான காஸ் சிலிண்டர் விலையை இன்று ரூபாய் 50 என்ற அளவில் உயர்த்தி அடித்தட்டு மக்களில் தலையில் இடியை இறக்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.
மேலும், வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் துயரத்தை கண்டுகொள்வதே இல்லை. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் சூழலில், காஸ் சிலிண்டர் விலையையும் ஒன்றிய பாஜக அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.