சூரியனை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய கூட்டமைப்பு உருவாக்கிய ப்ரோபா-3 என்ற இரட்டை செயற்கைகோள், பிஎஸ்எல்வி சி 59 என்ற ராக்கெட் மூலமாக நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், அந்த செயற்கைக்கோள்கள் தற்போது விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
550 கிலோ கொண்ட செயற்கைக்கோள்கள் இரண்டும், பூமியிலிருந்து 60,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுவட்ட பாதையில் 150 மீட்டர் இடைவெளியில் அருகருகே பயணம் செய்யும் என்றும், ஒரு செயற்கைக்கோள் சூரியனின் ஒளியை மறைத்து செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்கும் போது, மற்றொரு செயற்கைக்கோள் சூரியனின் வெளிப்பகுதியை ஆய்வு செய்யும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு ஆண்டில் 50 முறை செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்கி, இது போன்ற ஆய்வுகள் செய்யப்படும் என்றும் இதன் மூலம் வருங்காலத்தில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் போது, ஒரு விண்கலத்தில் இருந்து மற்றொரு விண்கலத்திற்கு இடம் பெயர, எரிபொருள்களை மாற்றிக் கொள்ள, இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பயன்படும் என்றும், அமெரிக்காவைப் போல் இந்தியாவும் விண்வெளி ஆய்வு மையம் அமைக்க முடியும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.