ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

Prasanth K

புதன், 30 ஜூலை 2025 (15:08 IST)

ஜெயலலிதா பாஜகவுடனான கூட்டணியை முறித்து பெரும் வரலாற்று பிழை செய்துவிட்டதாக கடம்பூர் ராஜூ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவர் காட்டிய வழியில் கட்சியை நடத்தி வருவதாக அதிமுக பிரமுகர்கள் கூறி வரும் நிலையில், தற்போது ஜெயலலிதா மறைந்து பல ஆண்டுகளுக்கு பின்னர் அவரது முடிவு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்போது அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ள நிலையில், கோவில்பட்டியில் நடந்த இரு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய கடம்பூர் ராஜூ “1998ம் ஆண்டில் பாஜக அதிமுக கூட்டணியில் இருந்தது. கூட்டணி ஆட்சியில் இருந்துவிட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல சுப்பிரமணியசுவாமி பேச்சை கேட்டு ஒரு ஓட்டில் பாஜகவை வீழ்த்தி நாங்கள் பெரும் பிழை செய்துவிட்டோம். அதனால் திமுக கூட்டணிகள் 14 ஆண்டுகள் கோலோச்சினர்” என பேசியுள்ளார். அதிமுக பிழை செய்துவிட்டதாக அவர் சொன்ன காலக்கட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக இருந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் எடுத்த முடிவை பிழை என்று கடம்பூரார் பேசுகிறாரா என சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

 

ஜெயலலிதாவின் முடிவு குறித்து கடம்பூர் ராஜூ பேசியதற்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த அவர் “கடந்த 1999ம் ஆண்டில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்ததைதான் நான் கூறினேன், நான் கூறிய கருத்து தவறுதலாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முடிவை நான் ஒருபோதும் பிழை என பேசவில்லை” என கூறியுள்ளார். 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்