வேல்ஸ் பல்கலைக்கழகமும் பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மையமும் இணைந்து வழங்கும்-இலவச திரைப்படக் கல்வி!

J.Durai
திங்கள், 6 மே 2024 (18:27 IST)
சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி B.Sc Film Studies (3 Years)  , M.Sc. Film and culture studies  (2 years), PG Diploma in Media skills  (1 year) ஆகிய பாடப்பிரிவுகளின்  கீழ் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக ஏட்டுக்கல்வியுடன் செயல்முறைக்கல்வியும் சிறந்த முறையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.   
 
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தரும் திரைப்பட தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ், பன்னாட்டு திரை பண்பாட்டு மையத்தின் நிறுவனத்தலைவர் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
 
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் திரைத்துறை கனவுகளை நிஐமாக்குவதே பன்னாட்டு திரை பண்பாட்டு மையத்தின் நோக்கமாகும். 
 
இதன் நிறுவனத்தலைவர் இயக்குநர்  வெற்றிமாறன் கூறுகையில் ......
 
தன்னை மேம்படுத்திய இந்தச் சமூகத்திற்கு தான் ஆற்ற வேண்டிய கடமை இது, எனவே இந்த மையத்தை நடத்துவதில் பெருமை கொள்வதாக தெரிவித்தார். 
 
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது ....
 
தமிழ் சினிமாவிற்கும் இந்திய சினிமாவுக்கும் உலக அளவில் பெருமை சேர்ந்து வரும் தேசிய விருது நாயகன் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடலூரில் பிறந்து திரைப்படக் கனவுகளுடன் சென்னை வந்து இயக்குநர் பாலுமகேந்திராவிடம் பயின்று இன்று பல தேசிய விருதுகளுக்கு  சொந்தக்காரராக இருப்பவர் அருமை நண்பர் இயக்குநர் வெற்றிமாறன். இவருடைய விசாரணை திரைப்படம் ஆஸ்கர்  விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டதை அனைவரும் அறிந்த விஷயம் பலருக்கும் தெரியாத விஷயம் என் நண்பரைப் பத்தி சில இங்கு நான் சொல்கிறேன். வெற்றிமாறனுக்கு இயற்கை விவசாயத்தின் மேல் தீராத காதல்  உண்டு. உத்திரமேரூரில் இயற்கை விவசாயம் பண்ணிட்டு இருக்கிறார். அதேபோல் மருத்துவ உதவியையும் கல்வி உதவியையும் அவர் கிட்ட யாரு போய் கேட்டாலும் உடனே உதவிசெய்யும் குணம் கொண்டவர். இதையெல்லாம் பொதுவெளியில் எங்கேயும் சொல்லிக்கவும் மாட்டார்.
 
அத்தோட  தமிழகத்தின் குக்கிராமங்களில் இருந்து திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு சென்னை வரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும், திரைத்துறையில் நுழைவதே குதிரைக்கொம்பு. அந்த மாதிரியான மாணவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பன்னாட்டு திரைப் பண்பாட்டு மையம் இலவசமாக மூன்றாண்டு திரைப்படக் கல்வியை வழங்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதில் திறமையுள்ள மாணவர்கள் சேர்ந்து இலவசமாக பயிலலாம். நாங்கள் இருவரும் இனி வரும் காலங்களில் சேர்ந்து இத்தகைய கல்விச்சேவையை அளிப்போம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்