தோனியுனுடனும், கோலியுடனும் சேர்ந்து யுவ்ராஜின் முதுகில் தேர்வாளர்கள் குத்திவிட்டனர் என யுவ்ராஜின் தந்தை யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது.
ஒரு கட்டத்தில் வெளிநாட்டுப் போட்டிகளிலாவது விளையாடலாம் என முடிவு செய்த அவர் கடந்த ஆண்டு இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் தற்போது சில வெளிநாட்டு தொடர்களிலும் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். ஆனால் இரண்டு உலகக்கோப்பைகளை வென்று கொடுத்த ஒரு வீரரை முறையான மரியாதை செலுத்தி ஓய்வு பெறவைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘நான் சவுரவ் கங்குலி தலைமையில் நிறைய விளையாடியுள்ளேன். அவர் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். ஆனால் அவரளவுக்கு நான் தோனி மற்றும் கோலி தலைமையில் ஆதரவைப் பெறவில்லை’ எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து இப்போது யுவ்ராஜின் தந்தை யோகராஜ் சிங் ‘சிறந்த வீரர்கள் ஓய்வு பெறும் போது, அவர்கள் வெளிப்படுத்திய திறமை அடிப்படையில் மரியாதையாக விடை கொடுக்க வேண்டும். தோனி, கோஹ்லி, ரோகித் என மூவரும் இந்திய கிரிக்கெட்டுக்காக பல சாதனைகள் படைத்தவர்கள். இவர்கள் ஓய்வு பெறும் போது சிறப்பான முறையில் வழியனுப்பி வைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் போர்டை கேட்டுக் கொள்வேன். கோலி மற்றும் தோனியுடன் சேர்ந்து தேர்வாளர்களும் யுவ்ராஜின் முதுகில் குத்திவிட்டனர்’ எனத் தெரிவித்துள்ளார்.