காவிரி பிரச்சனைக்காக கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்திற்கு, விஜயகாந்த் ஏன் வரவில்லை என்பதற்கான விளக்கத்தை அவர் சொல்ல வேண்டும் என திமுக பொருளாளரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் அளித்த பேட்டியில், ”விஜயகாந்த், எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, காவிரி பிரச்னைக்காக, அனைத்து கட்சி தலைவர்களை, டில்லி அழைத்துச் சென்றார்.
அப்போது, கருணாநிதியை சந்தித்து அழைப்பு விடுத்த போது, திருச்சி சிவாவை அனுப்பி வைத்தார். இப்போது, எதிர்க்கட்சி தலைவராக நான் கூட்டிய கூட்டத்திற்கு அவர் வரவில்லை. ஏன் வரவில்லை என்பதற்கான விளக்கத்தை, அவர் சொல்ல வேண்டும்” என்றார்.
மேலும், இந்த கூட்டம் அரசியல் ஆதாயத்துக்காக திமுக கூட்டத்தைக் கூட்டியுள்ளதா என கேள்வி எழுப்பியபோது, ’எந்தவித அரசியல் காரணங்களுக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவும் இந்தக் கூட்டம் கூட்டப்படவில்லை.
அப்படி ஒருவேளை கூட்டியிருந்தால் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட தமிழக கட்சியினர் நிச்சயம் இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்க மாட்டார்கள்’ என்றார்.