மேற்கு ஆர்டிக்கா, சபோர்கா, பெளல்வியா, லோடோனியா போன்ற உலகில் இல்லாத நாடுகளின் பெயர்களைக் கூறி, ஒரு வாடகை வீட்டில் போலியான தூதரகத்தை நடத்தி வந்த ஹர்ஷ் வர்தன் ஜெயின் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நாடுகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி, பண மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் போன்ற செயல்களில் இவர் ஈடுபட்டு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
போலி தூதரகத்தில் இருந்து ரூபாய் 44 லட்சம் மதிப்புள்ள பொருட்கள், கார்கள், போலியான பாஸ்போர்ட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
இவர் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாக போலியாக புகைப்படங்களை செட்டப் செய்துள்ளார் என்றும், ஏற்கனவே சட்டவிரோத செயற்கைக்கோள் தொலைபேசியை பயன்படுத்தியதற்காக கடந்த 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.