4 தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (10:05 IST)
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.
 

 
நடந்து முடிந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட பிரச்சனைகளால், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 232 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது.
 
அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சீனிவேல் மரணமடைந்ததை அடுத்து 3 தொகுதிகளும் சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் காலியாக உள்ளன.
 
காலியாக உள்ள இந்த மூன்று தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும். தலைமை தேர்தல் ஆணையம் நடத்தை விதிப்படி இந்த 3 தொகுதிகளிலும் வரும் நவம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்.
 
இந்நிலையில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வருகிற நவம்பர் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
 
அதன்படி மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் இன்று புதன்கிழமை [26-10-16] தொடங்குகிறது. இதேபோல் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதி சட்டப்பேரவைத் தொகுதியிலும் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல்‌ இன்று தொடங்குகிறது.
 
வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் நவம்பர் 2ஆம் தேதி ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 5ஆம் தேதி ஆகும்.
 
அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவு நவம்பர் 19ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 22ஆம் தேதியும் நடைபெறும். புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதியில் முதலமைச்சர் நாராயணசாமி போட்டியிடுகிறார்.
அடுத்த கட்டுரையில்